ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காபா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா விளையாடிய 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. அந்த போட்டியின் முடிவில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அசத்திய அவருக்கு அப்போதைய கேப்டன் தோனி 2010ஆண்டு சர்வதேச அரங்கில் வாய்ப்பு கொடுத்தார்.
அந்த வாய்ப்பில் அசத்திய அஸ்வின் 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு உதவினார். அதன் காரணமாக ஹர்பஜனை கழற்றி விட்ட தோனி அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்தார். அந்த வாய்ப்பில் தொடர்ந்து அசத்திய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்து இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2012 – 2024 வரையிலான காலகட்டங்களில் ஒரு தொடரில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட உதவினார்.
தமிழ்நாட்டின் ஜாம்பவான்:
2017 சாம்பியன்ஸ் டிராபியுடன் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கழற்றி விடப்பட்ட அஸ்வின் மனம் தவறாமல் ஐபிஎல் தொடரில் போராடினார். அதன் பயனாக 2022 டி20 உலகக் கோப்பையில் கம்பேக் கொடுத்த அவர் 2023 உலகக் கோப்பையிலும் இந்தியாவுக்காக விளையாடினார். அந்த வகையில் 106 டெஸ்ட், 116 ஒருநாள், 65 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 775 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் அனில் கும்ப்ளேவுக்கு பின் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தொடர்நாயகன் விருதுகள் வென்ற வீரர் என்ற முத்தையா முரளிதரன் உலக சாதனையையும் அஸ்வின் சமீபத்தில் சமன் செய்தார். அப்படிப்பட்ட மகத்தான அவர் தற்போது 38 வயதை தொட்டுள்ளார்.
அஸ்வின் ஓய்வு:
அதன் காரணமாக கடந்த நியூசிலாந்து தொடரில் அவர் தடுமாற்றமாக விளையாடினார். மறுபுறம் மற்றொரு தமிழக ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர் அவரது இடத்தில் அசத்தினர். அதன் காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்துள்ளார் என்றே சொல்லலாம். இதுபற்றி கலங்கிய கண்களுடன் அவர் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க: 22 வயதில் இளம் வீரர் சேசிங்கில் உலக சாதனை.. தெ.ஆ அணியை கடைசி ஓவரில் வீழ்த்திய பாகிஸ்தான்
“என்னைப் பற்றி நான் சொல்ல விரும்பவில்லை. சர்வதேச வீரராக இதுவே எனது கடைசி நாள். நிறைய நினைவுகளை உருவாக்கினேன். ரோகித் போன்ற சீனியர்களுடன் இதுவே கடைசிப் போட்டி நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல இருக்கிறேன். பிசிசிஐ, சக வீரர்கள், பயிற்சியாளர்கள் போன்ற அனைவருக்கும் நன்றி. இதுவே சர்வதேச கிரிக்கெட்டில் என்னுடைய கடைசி நாள். இருப்பினும் கிளப் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறினார். அவருக்கு ரசிகர்கள் பிரியமானதுடன் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.



