விஜய் ஹசாரே கோப்பை 2025 உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் டெல்லி மற்றும் மும்பை அணிக்காக விராட் கோலி, ரோஹித் சர்மா பல வருடங்கள் கழித்து விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதனால் அவர்களது ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஆரம்பத்தில் அப்போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோஹாட்ஸ்டார் ஆப் வாயிலாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அது மட்டுமின்றி விராட் கோலி களமிறங்கும் டெல்லி அணியின் முதல் 2 போட்டிகளும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும் அவருக்கு அமோக வரவேற்பளித்து ஆதரவளிக்க ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அங்கு நடைபெறவிருந்த போட்டிகள் அருகில் உள்ள எம்சிஏ மைதானத்திற்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ரசிகர்கள் கோபம்:
அதே போல விஜய் ஹசாரே போட்டிகள் நேரலையில் ஒளிபரப்பப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. அந்த சூழ்நிலையில் சிக்கிமுக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா சதமடித்து 155 ரன்கள் குவித்து மும்பை வெற்றி பெற உதவினார். ஆந்திராவுக்கு எதிராக 299 சேசிங்கில் 131 ரன்களை குவித்த விராட் கோலி டெல்லியை எளிதாக வெற்றி பெற வைத்தார்.
இருப்பினும் அவர்களது ஆட்டத்தை நேரலையில் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் இனிமேல் பணக்கார வாரியம் என்று வெளியே சொல்லிக் கொள்ளாதீர்கள் என பிசிசிஐயை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் விஜய் ஹசாரே போட்டிகளை நேரலையில் பிசிசிஐ ஒளிபரப்பாததன் காரணம் பற்றி அஸ்வின் விளக்கி பேசியது பின்வருமாறு. “எலான் மஸ்க்கால் மட்டுமே அனைத்து போட்டிகளையும் ட்விட்டரில் ஒளிபரப்ப முடியுமா? என்று ரசிகர்கள் கேட்கிறார்கள்”
அஸ்வின் விளக்கம்:
“ஏனெனில் அனைவரும் விராட், ரோஹித்தை பின்பற்ற விரும்புகிறார்கள். 155, 131 ரன்களை நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்த அவர்களைப் போன்றவர்கள் விளையாடும் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும். அதனால் அவர்களை நேரலையில் பார்க்க அனைவரும் விரும்பினார்கள். ஆனால் இந்தியாவில் சர்வதேச மற்றும் உள்ளூர் காலண்டர்கள் ஒரே நேரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் விராட், ரோஹித் எப்போது விளையாடுவார்கள் என்று முன்கூட்டியே தெரிந்தால் தான் எந்த போட்டிகளை ஒளிபரப்பலாம் என்பதையும் பிசிசிஐ முடிவெடுக்க முடியும்”
இதையும் படிங்க: இப்போவாச்சும் விராட், ரோஹித் தரத்தை புரிஞ்சிக்கோங்க.. நெட்ஸ் மாதிரி இதை செய்றது எளிதல்ல.. ஹர்பஜன் சிங்
“அப்போது விராட், ரோஹித் முதலில் விளையாடுவார்களா? என்ற கேள்வியாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று தெரிந்தாலும் அனைத்தையும் தயார் செய்வது கடினமாகும். அது மட்டுமின்றி இந்தியாவில் நிறைய உள்ளூர் அணிகள் இருக்கின்றன. அந்த அனைத்து அணிகளும் விளையாடும் போட்டிகளை உங்களால் ஒளிபரப்ப முடியாது. மற்ற வீரர்களின் திறமையும் சமமாக ஒளிபரப்புவது முக்கியம். அதனாலேயே பிசிசிஐ இந்த முடிவெடுத்துள்ளது” என்று கூறினார்.



