இந்தியாவுக்காக 765 விக்கெட்ஸ் எடுத்தும்.. ஃபேர்வெல் வேண்டாமென ஓய்வு பெற்றது ஏன்? அஸ்வின் விளக்கம்

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்காக 2வது அதிகபட்ச (765) விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 உலகக்கோப்பை வெற்றியாளரான 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார். மேலும் 2012 – 2024 வரை சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் வெற்றி நடை போடவும் அஸ்வின் கருப்பு குதிரையாக திகழ்ந்தார்.

ஆனாலும் இந்திய அணி அவருக்கு வெளிநாடுகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க யோசித்து வந்தது. அதனால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு அஸ்வின் விடை பெற்றது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. அதில் ஒருவரான ஜாம்பவான் கபில் தேவ் தாமாக இருந்தால் குறைந்தபட்சம் அஸ்வினுக்கு ஃபேர்வெல் போட்டியை நடத்தி மகிழ்ச்சியுடன் வழி அனுப்பி இருப்பேன் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ஃபேர்வெல் வேண்டாம்:

இந்நிலையில் ஃபேர்வெல் போட்டியை விரும்பாததாலேயே தாம் இப்படி ஆஸ்திரேலிய தொடரின் பாதியிலேயே ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக அஸ்வின் கூறியுள்ளார். அதற்கான காரணம் பற்றி கோபிநாத் யூடியூப் சேனலில் அஸ்வின் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை பிரம்மாண்டமான பிரியாவிடைகள் (ஃபேர்வெல்) தவறானது. நீங்கள் யாருக்கும் அதைக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை”

“ஏனெனில் கேரியரின் இறுதியில் யாரும் ஒரு துளி கண்ணீர் விடுவதை நான் விரும்பவில்லை. ஃபேர்வெல் என்பது நட்சத்திர கலாச்சாரத்தின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன். நாம் ஏன் ஒருவருடைய பின்னே செல்ல வேண்டும்? அவர்கள் மீது இருக்கும் அன்பை பற்றி நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் உண்மையில் அந்த நபர்களின் சாதனைகள், மரபு ஆகியவை மட்டுமே உத்வேகமாக எடுத்துக்கொள்ளபட வேண்டும்”

- Advertisement -

வருத்தம் இல்ல:

“ஃபேர்வெல் என்பது தவறானது. என்னைக் கொண்டாடும் வகையில் ஒரு போட்டி நடத்தப்பட்டால் அது விளையாட்டுக்கு அவமதிப்பு என்று நினைக்கிறேன். ஓய்வு மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. 537 விக்கெட்டுகளுக்காக மகிழ்ச்சியாக இல்லையென்றால் பின்னர் எதற்குத் தான் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்? இனிமேலும் விளையாடாமல் விடை பெறுவதில் ஏன் வருத்தமாக இருக்க வேண்டும்?”

இதையும் படிங்க: தம்பி ஆகாஷ் தீப்.. ஹெட்டுக்கு எப்படி உங்களை திருப்பி அடிக்கனும்னு தெரியும் – மைக்கல் கிளார்க் அதிரடி

“வாழ்க்கையில் இந்தப் பகுதியை மட்டுமே விட்டுள்ளேன். இப்போதும் கிரிக்கெட்டை பற்றி யூடியூபில் பேசுவேன். பயிற்சி கொடுப்பதை விரும்புவேன். அப்படி கிரிக்கெட்டை சுற்றி என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஓய்வு பெற்றதற்காக வருத்தமும் இல்லை. யார் மீதும் கோபமும் இல்லை. துளியளவும் அழவில்லை. எனது ஓய்வுக்கு யாரும் பொறுப்பும் கிடையாது” எனக் கூறினார்.

Advertisement