ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது. அந்த போட்டி நியூயார்க் நகரில் ஜூன் 5ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இந்தியாவுக்காக பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோர் அனுபவத்தால் அசத்துவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதில் ரோகித் சர்மா கடந்த 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்து இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதே போல 765 ரன்கள் அடித்த விராட் கோலி தொடர்நாயகன் விருது வென்று இந்தியா ஃபைனல் செல்ல உதவினர். இந்த 2 நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுமே தற்போது 35 வயதை கடந்து விட்டார்கள்.
அஸ்வின் கருத்து:
அதனால் இதுவே அவர்களுடைய கடைசி டி20 உலக கோப்பையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அவர்கள் வெற்றியுடன் விடை பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக களமிறங்கும் விராட் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு சூழ்நிலைகள் தெரியாது என்றாலும் ஃபார்முலா தெரியும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் விராட் கோலி தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி டாப் பேட்ஸ்மேனாக செயல்படுவார் என்றும் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இது சிபிஎஸ்சி கணக்கு தேர்வுக்கு நீங்கள் செல்வது போன்றதாகும். அங்கே உள்ள கணக்கை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்களுக்கு சூத்திரம் (ஃபார்முலா) தெரியும்”
“எனவே விராட் மற்றும் ரோஹித் ஆகியோருக்கு அங்கே என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பது தெரியும். ஒருவேளை சூழ்நிலைகள் தங்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும் கூட அவர்களால் சிறப்பாக விளையாடுவதற்கான விடையை கண்டறிய முடியும். இது போன்ற சூழ்நிலைகளில் விராட் கோலி மேலே இருப்பார் என்று நான் உணர்கிறேன்”
இதையும் படிங்க: அமெரிக்காவா இருந்தா என்ன.. இதை கூட செஞ்சு கொடுக்காம பார்க்ல விடுவீங்களா? ஐசிசி மீது டிராவிட் அதிருப்தி
“ஏனெனில் ஐபிஎல் தொடரில் நடந்ததை பார்த்து நீங்கள் வெஸ்ட் இண்டீஸில் டி20 போட்டிகள் வளைந்து கொடுக்கும் அளவுக்கு சென்றுள்ளதை பார்க்க வேண்டும். அங்குள்ள சூழ்நிலைகளில் நீங்கள் மாற்றியமைத்து விளையாட வேண்டிய திறமையை கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக ஏற்கனவே அங்கு செய்த செயல்பாடுகளை நினைத்து பார்த்து இவை தான் பதில்கள் என்று சொல்ல வேண்டும்” எனக் கூறினார்.