லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்கும் தருவாயில் இருக்கிறது. அப்போட்டியில் 374 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 339/6 ரன்கள் எடுத்துள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகளை வைத்துள்ள அந்த அணிக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால் வெற்றி பெறுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது.
முன்னதாக நேற்றைய நாளில் இந்திய அணியினர் வேகமாக 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள். அப்போது ஜோடி சேர்ந்த ஹாரி ப்ரூக் – ஜோ ரூட் ஆகியோர் 195 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை பந்தாடினார்கள். குறிப்பாக சிராஜ் விட்ட கேட்சை பயன்படுத்திய ப்ரூக் டி20 போல அதிரடியாக விளையாடி சதத்தை அடித்து 111 (98) ரன்கள் குவித்தார்.
கில், கம்பீர் தவறு:
மறுபுறம் நிதானமாக விளையாடிய ரூட் சதத்தை அடித்து 105 ரன்கள் குவித்து இந்தியாவிடம் இருந்து கிட்டத்தட்ட வெற்றியைப் பறித்து விட்டார் என்று சொல்லலாம். இந்நிலையில் நேற்றைய நாளில் வாஷிங்டன் சுந்தரை ஆரம்பத்திலேயே கொண்டு வந்திருந்தால் ப்ரூக்கை விரைவாக அவுட்டாக்கி இருக்கலாம் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 3வது போட்டியில் ரூட், ப்ரூக் ஆகிய இருவரையுமே வாஷிங்டன் சுந்தர் கிளீன் போல்டாக்கினார்.
இருப்பினும் அவரை நான்காவது போட்டியில் கேப்டன் கில் 68 ஓவர்கள் வரை பயன்படுத்தாதது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. அதே தவறை இப்போட்டியில் மீண்டும் செய்த கில், கம்பீர் ஆகியோரை அஸ்வின் விமர்சித்தது பின்வருமாறு. “இத்தொடரில் ஸ்பின்னர்களை நாம் சிறப்பாக பயன்படுத்தவில்லை. பல வழிகளில் விளையாட்டு விழிப்புணர்வு மற்றும் புத்திசாலித்தனமும் காணப்படவில்லை”
அஸ்வின் சாடல்:
“சுப்மன் கில் கேப்டனாக கற்றுக்கொண்டு முன்னேறுவார் என்று கருதுகிறேன். ஆனால் சில நேரங்களில் நீங்கள் ஸ்பின்னர்களை சரியாக பயன்படுத்தி அட்டாக் செய்ய வேண்டும். இது போன்ற சூழ்நிலைகளில் நீங்கள் அதை செய்யாவிட்டால் பின்னர் ஸ்பின்னர்கள் தடுப்பாட்ட ஆப்ஷனாக மாறி விடுவார்கள். ஹாரி ப்ரூக் 20 ரன்களில் இருந்த போதே ஸ்பின்னரைக் கொண்டு வந்திருக்க வேண்டும்”
இதையும் படிங்க: வெறும் 35 ரன்ஸ்.. இங்கிலாந்திடம் தற்காலிகமாக காப்பாற்றிய மழை.. இந்தியா அசாத்தியத்தை நிகழ்த்துமா?
“ஸ்பின்னர் ரன்களை கட்டுப்படுத்தியிருப்பார். மறுபுறம் நீங்கள் வேகப்பந்து வீச்சாளரை விக்கெட்டுகளை எடுக்க பயன்படுத்தியிருக்கலாம். இவை அனைத்தையும் மனதில் வைத்து வாஷிங்டன் சுந்தரை ஆரம்பத்திலேயே அட்டாக் செய்ய கொண்டு வந்திருக்க வேண்டும். இந்த தவறு பெரிய இடைவெளியை ஏற்படுத்தும். இந்த தவிர்க்கப்பட வேண்டிய தவறு களத்தில் செய்யப்படுகிறதா அல்லது பெவிலியனில் இருந்து வருகிறதா என்பது நமக்குத் தெரியவில்லை” என்று கூறினார்.



