சுப்மன் கில்லுக்காக அந்த 2 தரமான வீரர்களுக்கு அநியாயம் பண்ணிட்டீங்க.. அகர்கர் மீது அஸ்வின் விமர்சனம்

R Ashwin 2
- Advertisement -

ஆசிய கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்ட ஜெய்ஸ்வால் ஏற்கனவே இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் அறிமுகமாகி 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சதத்தை அடித்து தங்க பதக்கம் வெல்ல உதவினார்.

அதே போல 2024 ஐபிஎல், சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பைகளை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். 2025 ஐபிஎல் தொடரில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்து நொறுக்கிய அவர் 11 வருடங்கள் கழித்து பஞ்சாப்பை ஃபைனலுக்கு அழைத்துச் சென்று அசத்தினார்.

- Advertisement -

சுப்மன் கில்லுக்காக:

இருப்பினும் அவர்களை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 150க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் அடிக்கத் தவறிய சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக அறிவித்துள்ளது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக 754 ரன்கள் அடித்த அவர் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதன் காரணமாக அவருக்கு டி20 கிரிக்கெட்டில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சுப்மன் கில்லுக்காக தேர்வுக்குழுவினர் ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அநியாயம் செய்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயர் திடமான நற்சான்றிதழ்களை கொண்டுள்ளார். இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படாத அவர் உங்களுக்கு சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவினார்”

- Advertisement -

அஸ்வின் விமர்சனம்:

“சுப்மன் கில் நெருப்பான ஃபார்மில் இருப்பதாக நீங்கள் சொன்னால், ஸ்ரேயாஸ் ஐயரும் நல்ல ஃபார்மில் இருப்பதாக நான் சொல்வேன். இந்த கேள்விகளுக்கு யார் பதில் சொல்வார்கள்? ஸ்ரேயாஸ் எந்த தவறும் செய்யவில்லை. கொல்கத்தாவுக்காக மிகச்சிறப்பாக செயல்பட்ட அவர் கோப்பையை வெல்ல உதவினார். அங்கிருந்து ஏலத்திற்கு சென்ற அவர் பஞ்சாப்பை 2014க்குப்பின் இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரில் கே.எல் ராகுல் விளையாடனும்னா.. இந்தவொரு சான்ஸ் தான் இருக்கு – விவரம் இதோ

“ஷார்ட் பந்துகள் பிரச்சனையையும் சரி செய்த அவர் ரபாடா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோரை ஐபிஎல் தொடரில் எளிதாக எதிர்கொண்டார். அதனால் அவருக்காகவும் ஜெய்ஸ்வாலுக்காகவும் நான் வருந்துகிறேன். அது மிகவும் அநியாயமானது” என்று கூறினார். முன்னதாக 15 பேரை மட்டுமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதால் அவர்களை கழற்றி விட்டதாக தேர்வுக்குழு தலைவர் அஜித் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement