
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோர் கழற்றி விடப்பட்டது பல ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது. அதே போல டி20 கிரிக்கெட்டில் வேகமாக ரன்கள் குவிப்பதில் தடுமாற்றத்தைக் கொண்டுள்ள சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடி வரும் அவர் ஐசிசி தர வரிசையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் முதல் தொடரிலேயே 754 ரன்கள் அடித்து இங்கிலாந்து மண்ணில் இந்தியா தொடரை சமன் செய்ய உதவினார். அதனால் அவரை பிசிசிஐ டி20 கிரிக்கெட்டிலும் கேப்டனாக நியமிக்க விரும்புகிறது.
அதனாலேயே தேர்வுக்குழு அஜித் அகர்கர், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் அவரை துணை கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்றே சொல்லலாம். இந்நிலையில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதால் சுப்மன் கில் கண்டிப்பாக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதனால் அபிஷேக் சர்மாவுடன் ஓப்பனிங்கில் களமிறங்கி சதங்களை அடித்து மறுவாழ்வு பெற்ற சஞ்சு சாம்சன் டி20 கேரியர் முடியப்போவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதா அஸ்வின் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நன்றி சொல்ல முடியாத தேர்வுக்குழுவின் வேலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒருவரை சேர்த்து மற்றொருவரை கழற்றி விடுவது எளிது கிடையாது. அதற்காக நீங்கள் வீரர்களிடம் பேச வேண்டும், சோகமான சூழ்நிலைகளைத் தாண்ட வேண்டும். ஸ்ரேயாஸ், ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்படாத காரணம் பற்றி அவர்களிடம் சொல்லப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்”
“குஜராத்துக்காக நிறைய ரன்கள் அடித்துள்ள சுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜெய்ஸ்வால் 3வது ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இருந்தார். அப்படிப்பட்ட அவரையும் ஸ்ரேயாஸ் ஐயரையும் நீக்கியுள்ளதற்காக நான் சோகமடைந்துள்ளேன். அது அந்த 2 குழந்தைகளுக்கு நியாயமற்றது”
இதையும் படிங்க: துருவ் ஜுரேலை தாண்டி ஆசிய கோப்பை அணியில் ஜிதேஷ் சர்மா இடம்பிடிக்க இதுவே காரணம் – விவரம் இதோ
“ஜெய்ஸ்வால் நல்ல ஃபார்மில் இருக்கிறார். கில் வருங்காலத்தில் ஆல் ஃபார்மட் கேப்டனாக இருக்கலாம். ஆனால் 3 ஃபார்மட்டிலும் ஒரே கேப்டன் இருக்க வேண்டிய அவசியமில்லை. கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளதால் சஞ்சு சாம்சனுடைய இடத்துக்கு ஆபத்து வந்துள்ளது என்பது சோகமான விஷயமாகும். அதனால் சஞ்சு கண்டிப்பாக விளையாடப் போவதில்லை. சுப்மன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவார்” என்று கூறினார்.