
இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெறுவதாக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தது பலருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. 2010 முதல் 3 வகையான ஃபார்மெட்டிலும் விளையாடிய அவர் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். 2012 – 2024 வரை சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்தியா தோற்காமல் இருக்க முக்கிய பங்காற்றிய அவர் அதிக தொடர்நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த வருடம் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் பவுலராக ஜொலித்த அவர் இந்தியாவின் மேட்ச் வின்னராக செயல்பட்டு வந்தார். அப்படியிருந்தும் வெளிநாடுகளில் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் கொடுக்காமல் இந்திய அணி புறக்கணித்து வந்தது. அதனால் 38 வயதாகும் அஸ்வின் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக சச்சினுக்கு நிகரான அஸ்வினை இப்படி மரியாதையின்றி அனுப்பியிருக்கக்கூடாது என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்திருந்தார். அதே போல தகுதியிருந்தும் அஸ்வினுக்கு ஒரு முறை கூட கேப்டன்ஷிப் செய்யும் வாய்ப்பை இந்திய அணி கொடுக்காமல் அவமானப்படுத்தியதாக சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியை தலைமை தாங்கும் கேப்டன்ஷிப் பொறுப்பு கிடைக்காததற்காக வருத்தப்படவில்லை என்று அஸ்வின் கூறியுள்ளார்.
அதே சமயம் அந்த கெளரவமான வாய்ப்பு கிடைத்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றியிருப்பேன் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனக்கு என்ன வேலை செய்யும் என்பதும் மற்றொரு நபருக்கு என்ன வேலை செய்யாது என்பதும் தெரியும் அளவுக்கு நான் சாதுரியமானவன்”
“எனது கேரியரின் ஆரம்பத்திலேயே உள்ளூர் கிரிக்கெட்டில் எனக்கு கேப்டன்ஷிப் கிடைத்தது. என்னுடைய அணிக்காக சில தொடர்களையும் நான் வென்றுள்ளேன். எனவே கேப்டன்ஷிப் திறமை எனக்குள் இருப்பதாகவே நம்புகிறேன். இருப்பினும் எனது நாட்டை வழி நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைக்காததற்காக நான் வருத்தப்படவில்லை. ஏனெனில் அது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை”
இதையும் படிங்க: இந்தியாவுக்கு தலைவலியாக இருந்த டிராவிஸ் ஹெட்டுக்கு ஏற்பட்ட பின்னடைவு – வெளியான நற்செய்தி
“கேப்டன்ஷிப் செய்யும் போது 15 – 20 பேர் எனது வழியில் வரவேண்டும் என்பதை உணர்ந்தேன். தலைமை பண்பு என்ற பட்டம் இருந்தால் தான் நீங்கள் அதை செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. ஏனெனில் மற்றவர்களின் வெற்றியில் பங்காற்றும் அளவுக்கு எனக்குள் நல்ல தலைமைப் பண்பு இருக்கிறது. எனவே கேப்டன்ஷிப் கிடைக்காதது பற்றி எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதே சமயம் கிடைத்திருந்தால் அதை மகிழ்ச்சியுடன் செய்திருப்பேன் என்று நானும் நினைத்திருக்கிறேன்” எனக் கூறினார்.