
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி துவங்குகிறது. அதில் 2013க்குப்பின் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கும் இந்தியா தங்களுடைய முதல் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டி வரும் பிப்ரவரி 20ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. முன்னதாக கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா தோனி தலைமையில் வென்றதை மறக்க முடியாது.
ஷிகர் தவான் – ரோஹித் சர்மாவை புதிய ஓபனிங் ஜோடியாக களமிறக்கிய தோனி அத்தொடரின் ஃபைனலில் மிகச் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்தார். எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்ட அந்த ஃபைனலில் இங்கிலாந்தை சொந்த மண்ணில் இந்தியா எதிர்கொண்டது. மழையால் 20 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 130 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயித்தது.
அதிகபட்சமாக விராட் கோலி முக்கியமான 43 (34) ரன்கள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு கேப்டன் அலெஸ்டர் குக் 2 ரன்னில் உமேஷ் யாதவ் வேகத்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜொனதன் ட்ராட் அதிரடியாக விளையாடி அச்சுறுத்தலை கொடுத்தார். அப்போது அவரை 20 (17) ரன்னில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கிய அஸ்வின் அடுத்ததாக வந்த ஜோ ரூட்டையும் 7 ரன்னில் காலி செய்தார்.
இயன் பெல்லை 13 ரன்னில் ஜடேஜா காலி செய்தார். மிடில் ஆர்டரில் இயன் மோர்கன் 33, ரவி பொப்பாரா 30 ரன்களில் இஷாந்த் சர்மா வேகத்தில் நடையை கட்டினர். இறுதியில் ஜோஸ் பட்லரை டக் அவுட்டாக்கிய ஜடேஜா போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்த நிலையில் கடைசி ஓவரை வீசிய அஸ்வின் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்நிலையில் அந்தப் போட்டியில் ஜொனதன் ட்ராட் விக்கெட்டை எடுக்க தோனி தமக்குக் கொடுத்த திட்டத்தை இன்னும் நம்ப முடியவில்லை என அஸ்வின் கூறியுள்ளார்.
இது பற்றி ஜியோஹாட்ஸ்டார் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “மஹி பாய் என்னிடம் வந்து ட்ராட்க்கு எதிராக ஓவர் தி ஸ்டம்ப் பகுதியில் பந்து வீசாதீர்கள். அரௌண்ட் தி விக்கெட் திசையில் பந்து வீசுங்கள். அவர் லெக் சைட் திசையில் விளையாட முயற்சிக்கும் போது பந்து சுழன்றால் ஸ்டம்பிங்காக வாய்ப்புள்ளது என்று சொன்னார்”
இதையும் படிங்க: 107க்கு ஆல் அவுட்.. 2 – 0.. ஆஸியை தெறிக்க விட்ட இலங்கை.. 1985 இந்தியாவை முந்தி பெரிய சாதனை வெற்றி
“தோனி அதை எப்படி கணித்தார் என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை” என்று வியப்புடன் கூறினார். அந்த வகையில் தோனியின் மாஸ்டர் பிளான் இந்தியாவுக்கு 2013 சாம்பியன்ஸ் டிராபியை பெற்றுக் கொடுத்தது. அதே போல இம்முறை ரோஹித் தலைமையில் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.