ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் 242 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதத்தை அடித்து வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதன் காரணமாக அதே போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகள் எடுத்து அசத்திய குல்தீப் யாதவ் செயல்பாடுகள் பாராட்டப்படாமல் போனதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். இடுப்பில் காயத்தை சந்தித்து கம்பேக் கொடுத்துள்ள அவரை இந்திய ரசிகர்கள் யாருமே பாராட்டவில்லை என்று அஸ்வின் ஆதங்கத்தை கூறியுள்ளார். உண்மையில் அவரும் கிங் விராட் கோலி போல பந்து வீச்சில் திறமை கொண்டவர் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
கிங் கோலி போல:
இது பற்றி அஸ்வின் பேசியது பின்வருமாறு. “காயத்துக்குப் பின் ஒரு ஸ்பின்னர் கம்பேக் கொடுக்கிறார் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் நமது நாட்டில் பவுலர்களைக் கண்டு கொள்வதற்கு கூட நேரம் இருப்பதில்லை. ஆனால் ஒரு பேட்ஸ்மேன் கம்பேக் கொடுத்த பின் தடுமாற்றமாக விளையாடினால் அவர் காயத்திலிருந்து இப்போது தான் வந்தார் என்று சொல்கிறோம்”
“அந்த விஷயம் விராட் கோலிக்கு நடந்து அவர் 2 – 3 போட்டிகள் தடுமாறினால் அனைவரும் கிங் விரைவில் அசத்துவார் என்று சொல்வார்கள். குல்தீப் யாதவும் அப்படி தான். அவர் தன்னுடைய கைகளில் மிராக்கள் (அதிசயம்) வைத்துள்ளார். அதை இன்று அவர் உலகிற்கு காண்பித்துள்ளார். ஸ்பின்னர்களான எங்களுடைய வாழ்க்கை 2 நிமிடங்களில் மாறக்கூடியது”
அஸ்வின் பாராட்டு:
“அதற்கு குல்தீப் யாதவ் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எடுத்துக்காட்டாக செயல்பட்டார். சல்மான் ஆகா போன்ற பேட்ஸ்மேனை வீழ்த்துவது எளிதல்ல. அடுத்த பந்திலேயே ஷாஹீன் அப்ரிடியையும் வீழ்த்திய குல்தீப் அற்புதமாக பௌலிங் செய்தார். அவருடைய காயம் என்ன என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது ஸ்போர்ட்ஸ் ஹெரினா. அது இடுப்புக்கு கீழே ஏற்படக்கூடிய காயமாகும்”
இதையும் படிங்க: விராட் கோலி ஒன்டே என்ஜின்.. ஆஸியில் விமர்சித்தவங்களுக்கு அது தெரியாது.. 2வது இன்னிங்ஸ் வரும்.. அஸ்வின்
“ஸ்பின்னர்களுக்கு இடுப்பிலிருந்து டிரைவ் கிடைப்பது முக்கியம். அப்படிப்பட்ட காயத்திலிருந்து வந்துள்ள அவர் மீண்டும் முழுமையாக அசத்துவதற்கு கொஞ்சம் நேரத்தை எடுத்துக் கொள்வார். மேலும் துபாய் பிட்ச்சில் ஸ்பின்னர்களுக்கு பெரிதாக எந்த ஆதரவும் இல்லை. அது போன்ற ஆடுகளத்திலும் குல்தீப் மிகவும் சிறந்த வேலையை செய்தார்” எனக் கூறினார்.



