
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் தோற்றது. குறிப்பாக கௌகாத்தியில் நடைபெற்ற போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஏற்கனவே கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராகவும் இந்தியா சொந்த மண்ணில் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்திருந்தது.
அந்தத் தோல்விக்கு காரணமான கௌதம் கம்பீர் பதவி விலக வேண்டும் என்று ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் தாங்கள் தான் சுழலுக்கு சாதகமான பிட்ச் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக பின் கம்பீர் தெரிவித்தார். அதில் இந்திய அணி சிறப்பாக விளையாடத் தவறியதே தோல்விக்கு காரணமானதாக கம்பீர் தெரிவித்திருந்தார்.
அதை விட 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, 2025 ஆசியக் கோப்பையை தமது தலைமையில் இந்தியா வென்றதாகவும் கம்பீர் தெரிவித்தார். ஆனால் அதை மக்கள் மறந்து விட்டு தம்மை விமர்சிப்பதாகவும் அவர் வேதனைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் விளையாடி வெற்றி காண வேண்டும் என்ற அணுகுமுறையை ரோஹித் சர்மா – ராகுல் டிராவிட் உருவாக்கியதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அதை பின்பற்றியே இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசியக் கோப்பைகளை தோல்வியே சந்திக்காமல் வென்றதாகவும் அஸ்வின் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா எப்போதும் அணியிலிருந்து என்ன விரும்புகிறார் என்பதைக் தம்முடைய ஆட்டத்தில் காட்டி முத்திரையைப் பதிக்க விரும்பினார்”
“நம்மிடம் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் வேகமாக பேட்டிங் செய்வதற்கான மாற்றத்தை உண்டாக்கிய பெருமை ரோஹித் மற்றும் ராகுல் பாயைச் சேரும். நாங்கள் இப்படித்தான் விளையாட விரும்புகிறோம் என்பதை அவர்கள் காண்பித்தார்கள். அதுவே இந்தியர்களின் வழக்கமான பேட்டிங்கை மாற்றியது. அவர்கள் உண்டாக்கிய அணுகுமுறையால் தற்போதைய இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பேட்டிங் என்பது சராசரியைப் பற்றியது கிடையாது. ஸ்ட்ரைக் ரேட்டை பற்றியது என்ற நிலைமை உருவாகியுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: ராணாவுக்கு மட்டும் தொடர்ந்து கம்பீர் வாய்ப்பு வழங்குவது ஏன்? பின்னணியை பகிர்ந்த சந்தீப் சர்மா
அவருடைய இந்த கருத்து கௌதம் கம்பீருக்கு நிதர்சனத்தை நினைவுப்படுத்தும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். இது போக 2025 சாம்பியன்ஸ் ட்ராபி, ஆசியக் கோப்பை வென்ற இந்திய அணியை ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் கட்டமைத்ததாக மற்றொரு முன்னாள் வீரர் மனோஜ் திவாரி சமீபத்தில் தெரிவித்திருந்தார். எனவே ஒருவேளை கம்பீர் இல்லாமல் இருந்திருந்தால் கூட இந்தியா அவ்விரு கோப்பைகளை வென்றிருக்கும் என்று திவாரி சொன்னது குறிப்பிடத்தக்கது.