ஐசிசி 2026 அண்டர்-19 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜனவரி 15ஆம் தேதி ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் துவங்குகிறது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் இந்தியா அண்டர்-19 அணி தென்னாப்பிரிக்காவில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்த 3 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவை ஒய்ட்வாஷ் செய்து கோப்பையை வென்றது.
அந்தத் தொடரில் 14 வயதாகும் வைபவ் சூரியவன்சி கேப்டனாக தலைமைத் தாங்கி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக பேட்டிங்கில் 2வது போட்டியில் 68 (24) ரன்கள் அடித்த அவர் 3வது போட்டியில் 127 (74) ரன்களை விளாசி வெற்றியில் பங்காற்றினார். இந்த வெற்றியால் உலகக் கோப்பையை வெல்வதற்கு தயாராக இருக்கிறோம் என்பதையும் இளம் இந்திய அணி காண்பித்துள்ளது.
இந்த அடி போதுமா:
இந்நிலையில் கடந்த 30 தினங்களில் சூரியவன்சி களமிறங்கிய பெரும்பாலான போட்டிகளில் நிலையாக பெரிய ரன்கள் குவித்துள்ளதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். அவருடைய ஆட்டம் இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்ற வகையில் இருப்பதாகவும் அஸ்வின் புகழ்ந்துள்ளார். இதே வேகத்தில் அவர் 2026 அண்டர்-19 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வெற்றியின் பங்காற்றுவார் என்றும் அஸ்வின் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் இடத்தையும் அவர் நிரப்புவார் என்று அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் அஸ்வின் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “171 (95), 50 (26), 190 (84), 68 (24), 108* (61), 46 (25) மற்றும் இன்று 127 (47). இது கடந்த 30 நாட்களில் உள்ளூர் மற்றும் அண்டர்-19 கிரிக்கெட்டில் வைபவ் சூரியவன்சி அடித்த சில ஸ்கோர்களாகும்”
அஸ்வின் பாராட்டு:
“என்ன தம்பி இந்த அடி போதுமா? இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா? இந்தக் குழந்தை 14 வயதில் செய்வதை உங்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அண்டர்-19 உலகக்கோப்பை நெருங்கியுள்ள நிலையில் வைபவ் சிறப்பாக விளையாடக்கூடியவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது முடிந்ததும் உடனடியாக ஐபிஎல் தொடரில் அவருக்கு முழுமையாக விளையாடும் வாய்ப்பு கிடைக்க உள்ளது”
இதையும் படிங்க: இந்திய ஒருநாள் அணியில் இடம் கிடைக்காதது குறித்து மவுனம் கலைத்த தேவ்தத் படிக்கல் – விவரம் இதோ
“அங்கே அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சன் இடத்தில் விளையாட உள்ளார். எனவே அடுத்த 4 மாதங்கள் சூரியவன்சியின் ஆட்டத்தைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கும். அது அவருடைய உறுதி, பசி, பாத்திரம் ஆகியவற்றை நமக்கு சொல்லும்” என்று கூறினார். இப்படி தொடர்ந்து அசத்தும் பட்சத்தில் சூரியவன்சி இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் விளையாடும் நாட்கள் தூரமில்லை என்றால் மிகையாகாது.



