இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெறும் 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் இந்தியா கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.
இருப்பினும் கடைசி நாளில் நெருப்பாக பந்து வீசிய இந்தியா 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளை எடுத்து சரித்திர வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்தியாவுக்காக தன்னுடைய உடல் வலியை பொருட்படுத்தி மறுப்பு சொல்லாமல் அனைத்து போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் தலைமுறையில் ஒருமுறை வரக்கூடிய வீரர் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
அங்கீகரித்த கிரிக்கெட் கடவுள்:
திறமையைத் தாண்டி தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவற்றைக் கொண்டுள்ள சிராஜ் கடவுளால் அங்கீகரிக்கப்பட்ட பவுலர் என்றும் அஸ்வின் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முகமது சிராஜை நாம் அங்கீகரிக்க தவறி விட்டோம். தற்போது அவரை அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அவருடைய கொண்டாட்டம் இது ட்ரைலர் அல்ல மெயின் பிக்சர் என்று சொல்வது போல் இருந்தது”
“மேலும் தயவு செய்து என்னை மேட்ச் வின்னராக கருதுங்கள் என்று சிராஜ் சொன்னார். சிராஜ் தம்மை ஒரு சாம்பியன் பவுலர் என்பதை நினைவுபடுத்தியுள்ளார். அவருடைய பவுலிங் ஆக்சன், டெக்னிக், வேலை நெறிமுறைகள் ஆகியவை தான் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாட வைத்துள்ளது. அவருக்கும் வயதாகிறது. எனவே அவருக்கும் ஓய்வு கொடுத்தால் நம்முடைய நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக வருவார்”
அஸ்வின் பாராட்டு:
“அனுபவமிக்க சிராஜை சுற்றி ஆகாஷ், பிரசித், அர்ஷ்தீப் ஆகியோரை வைத்து பவுலிங் அட்டாக்கை நாம் உருவாக்க வேண்டும். இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சிராஜை கொண்டாடுங்கள். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பின் “நான் பும்ராவை நம்புகிறேன்” என்று சிராஜ் சொன்னதை அனைவரும் அறிவோம். ஆனால் இன்று இத்தொடரை சமன் செய்ய பும்ரா அல்ல, சிராஜ் பாய் தான் முக்கிய கருவியாக இருந்துள்ளார்”
“பும்ரா இல்லாமலேயே சிராஜ் தலைமையில் நாம் தொடரை சமன் செய்துள்ளோம். சில நேரங்களில் தவறு செய்தாலும் அதற்காக சிராஜ் ஓடாமல் நிற்பதில்லை. உடல் வலியால் என்னால் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று ஒருவர் சொல்வது எளிது. உண்மையில் 5 போட்டிகளில் விளையாடுவதும் கடினம். ஆனால் சிராஜ் அதற்கெல்லாம் பின்வாங்கி வெளியேறவில்லை”
இதையும் படிங்க: அந்த இந்திய வீரரை ரசித்தேன்.. என் வாழ்நாளில் இதான் நான் பார்த்த பட்டாசான பெஸ்ட் சீரிஸ்.. மெக்கல்லம் பாராட்டு
“அவருடைய இந்த விஷயங்களை கிரிக்கெட்டின் கடவுள்கள் அங்கீகரித்துள்ளார்கள். அதற்கு சிராஜ் தகுதியானவர். இந்தியா போன்ற நாட்டில் சிராஜ் போன்ற வீரர்களைக் கண்டறிவது எளிதல்ல. தன்னுடைய தூய்மையான அணுகுமுறைக்காகவே முகமது சிராஜ் தலைமுறையில் ஒருமுறை வரக்கூடிய கிரிக்கெட்டர்” என்று பாராட்டினார்.



