
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் முதல் அரையிறுதிப்போட்டியில் மார்ச் நான்காம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது. அதில் வலுவான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. 2023 உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய போது இந்தியாவை சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.
அதற்கு முன்பாகவே லண்டனில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த 2 போட்டிகளிலுமே சதத்தை அடித்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்ததை மறக்க முடியாது. மேலும் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் 2 சதங்கள் அடித்த அவர் இந்தியா 10 வருடங்கள் கழித்து தோற்க முக்கிய காரணமானார்.
எனவே இந்தப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டுமெனில் அதற்கு டிராவிஸ் ஹெட்டை ஆரம்பத்திலேயே சாய்க்க வேண்டும் என்றே சொல்லலாம். இந்நிலையில் அதற்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை வைத்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு நல்ல திட்டத்தை வகுத்துள்ளார். இது பற்றி தனது இந்திய யூடியூப் சேனலில் அவர் பேசியது பின்வருமாறு.
“புதிய பந்தை வருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்து டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக ஓவர் தி ஸ்டம்ப் பகுதியிலிருந்து பந்து வீசச் சொல்லுங்கள். ஹெட் தனது 3 ஸ்டம்புகளையும் காண்பித்து காலை நகர்த்தி மேலே தூக்கி அடிப்பார். எனவே புதிய பந்தில் வருண் சக்கரவர்த்தி இந்தியாவுக்கு அவரை சாய்க்கும் வாய்ப்பைக் கொடுக்கலாம்”
“வருணுக்கு எதிராக ஹெட் பின்னங்காலை வைக்க முயற்சித்தால் அதைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவேன். அதிரடியாக விளையாட விருப்பம் அவர் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர். அதனால் ஒன்று அவர் ஆஸ்திரேலியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுக்கக்கூடும் அல்லது இந்தியாவுக்கு எதிராக சீக்கிரமாக அவுட்டாகக் கூடும். ஒருவேளை ஹெட் அவரை அடித்து நொறுக்க முயற்சிக்காவிட்டால் வருணுக்கு 5 தொடர்ச்சியான ஓவர்களை கொடுங்கள்”
இதையும் படிங்க: அரையிறுதி போட்டிக்கான ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் – ஆடுகள பராமரிப்பாளர் பேட்டி
“ஆஸ்திரேலிய அணியில் நிறைய வலது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அதை சமாளிக்க நம்மிடம் ஜடேஜா, அக்சர் பட்டேல் உள்ளார்கள். எனவே டாஸ் வென்றால் ஆஸ்திரேலியாவை பேட்டிங் செய்ய வையுங்கள். டிராவிஸ் ஹெட் விக்கெட் ஆரம்பத்திலேயே கிடைத்து விட்டால் போட்டி இந்தியாவின் கட்டுக்குள் வந்து விடும். ஒருவேளை இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் ஸ்பென்சர் ஜான்சன் நெருப்பாக முதல் ஸ்பெல்லை வீசாத வரை சராசரிக்கும் மேற்பட்ட ஸ்கோர் அடிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை” எனக் கூறினார்.