இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனால் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஏனெனில் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
அடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய அவர்களை தேர்வுக்குழு கழற்றி விட தயாரானது. அதற்கு முன்பாக அவர்களாகவே அடுத்தடுத்து ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல 2027இல் 38, 40 வயதில் அவர்களால் அசத்த முடியுமா? என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டு கில் தலைமையில் புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது.
வயசாகிட்டா போகனுமா:
இந்நிலையில் வயதாகிவிட்டால் ஓய்வு பெற வேண்டும் என்ற நிலைமை இந்திய அணியில் இருப்பது முறையல்ல என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பொம்மரசித்துள்ளார். மேலும் 2027 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக உள்ளூரில் விளையாடி தயாராக இருக்குமாறு விராட், ரோஹித்திடம் தேர்வுக்குழு சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ரோஹித், விராட் ஆகியோரைப் பொறுத்த வரை, நம்முடைய நாட்டில் சீனியர் வீரர்கள் 2 விதமாக பார்க்கப்படுகிறார்கள். ஒன்று சீனியர் வீரர்கள் வயதாகி விட்டதால் செல்ல வேண்டும் அல்லது இளம் வீரர்களுக்கு சீனியர்கள் வழிவிடுவதற்கான நேரம் வந்து விட்டது என்ற 2 நிலை உள்ளது. இந்த 2 பார்வைகளுமே மிகவும் தவறானது. விராட், ரோஹித் ஆகியோர் இந்திய அணியில் விளையாடுவதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளனர்”
அஸ்வின் ஆதரவு:
“கிட்டத்தட்ட 2 தசாப்தம் நாட்டுக்காக விளையாடிய அவர்கள் இன்னும் அதிகமான மரியாதைக்குத் தகுதியானவர்கள். ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி விவாதிக்க எதுவுமே இல்லை. ஆனால் அவர் 2027 உலகக்கோப்பைக்கான பாதையில் இருக்கிறாரா? என்பதே தேர்வுக்குழு மற்றும் பயிற்சியாளர்கள் கேட்க வேண்டிய கேள்வியாகும். அதற்கு அவர்கள் உலகக்கோப்பை திட்டங்களில் இல்லை என்பது ஒரு பதிலாகும்”
இதையும் படிங்க: சுதர்சன் அடிக்கலன்னா அவரைப் போல.. இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்படலாம்.. ரியான் மறைமுக எச்சரிக்கை
“திட்டத்தில் இருந்தால் 2027 வரை அவர்களால் ஃபார்மை தக்க வைக்க முடியுமா? என்பது மற்றொரு பதிலாகும். ஒருவேளை அவர்கள் தேவை என்றால் இந்தியா ஏ அணிக்காக விளையாடுங்கள் என்று சொல்ல வேண்டும். இல்லையெனில் விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட வேண்டும். அங்கே விளையாடினால் தான் அவர்களுடைய ஃபார்ம் பற்றிய நிலை தெரியும். எந்த தேர்வாளருக்கும் விராட், ரோஹித் ஆகியருடைய சேவை வேண்டாம் என்று சொல்ல இதயம் இருக்காது. ஏனெனில் அவர்களுடைய அனுபவத்தை கடையில் வாங்க முடியாது” என்று கூறினார்.



