எப்போவுமே மும்பை ஆளனுமா? தமிழ்நாட்டை கிண்டலடித்த மும்பைகாருக்கு அஷ்வின், அபினவ் முகுந்த் கொடுத்த மாஸ் பதிலடி

abinav mukund ashwin
- Advertisement -

இந்தியாவின் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையில் நவம்பர் 21ஆம் தேதியன்று நடைபெற்ற 100வது லீக் போட்டியில் அருணாச்சலப் பிரதேசத்தை அடித்து நொறுக்கிய தமிழ்நாடு ஏராளமான உலக சாதனைகளை படைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. புகழ்பெற்ற பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தமிழகம் 50 ஓவரில் 506/2 ரன்களை குவித்து லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 500 ரன்கள் கடந்த முதல் அணியாகவும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் உலக சாதனை படைத்தது. அத்துடன் 416 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நாராயன் ஜெகதீசன் – சாய் சுதர்சன் ஆகியோர் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 400 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடியாகவும் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் குவித்த ஜோடியாகவும் உலக சாதனை படைத்தனர்.

மேலும் 277 ரன்களை குவித்த நாராயண ஜெகதீசன் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேனாகவும் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் 5 சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேனாகவும் இரட்டை உலக சாதனைகளை படைத்தார். அதுபோக அருணாசலப் பிரதேசத்தை 71 ரன்களுக்கு சுருட்டிய தமிழகம் 435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் உலக சாதனை படைத்தது. அப்படி அடுத்தடுத்த உலக சாதனைகளால் அசத்திய தமிழக அணியை தமிழக ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மனதார பாராட்டினார்கள்.

- Advertisement -

நீங்களே ஆளனுமா:
ஆனால் கீழே கிடந்தவன் மேலே எழுந்து ஒரு சாதனை செய்தால் மேலே இருப்பவர்களுக்கு பிடிக்காது என்று சொல்வதைப்போல தமிழகத்தை விரும்பாத சிலர் கத்துக்குட்டியை அடித்து உலக சாதனைகளை படைத்து பெருமை கொள்ள வேண்டாம் என்று விமர்சித்தார்கள். அந்த வரிசையில் “88 வருட ரஞ்சிக் கோப்பை வரலாற்றில் தமிழ்நாடு 2 கோப்பைகளை மட்டுமே வென்றது” என்று சம்பந்தமில்லாமல் மும்பையைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் விமர்சகர் மற்றும் வல்லுனர் மக்ராண்ட் வைய்ங்கங்கர் தனது ட்விட்டரில் வன்மத்தை கக்கினார்.

தமிழக அணியின் வெற்றியை அனைத்து ரசிகர்களும் கொண்டாடிய அந்த நேரத்தில் அவர் போட்ட இந்த ட்வீட் சம்பந்தமில்லாமல் இருந்ததுடன் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டை எப்போதுமே “மும்பை தான் ஆள வேண்டும் இதர அணிகள் அதற்கு முன் மண்டியிட வேண்டும்” என்ற வகையில் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. ஆனால் அதற்கு அசராத முன்னாள் தமிழக வீரர் அபிநவ் முகுந்த் “20 வருட விஜய் ஹசாரே கோப்பை வரலாற்றில் தமிழ்நாடு 5 கோப்பைகளை வென்றுள்ளது” என்று அவருக்கு நெத்தியடி பதிலை கொடுத்தார்.

- Advertisement -

அதற்கு நான் “இந்திய கிரிக்கெட்டின் சாம்பியன்ஷிப் பற்றி பேசுகிறேன்” என்று மீண்டும் அந்த வல்லுனர் வன்மத்தை காட்டினார். அதற்கு விஜய ஹசாரே கோப்பை என்ன செவ்வாய் கிரகத்தில் நடக்கிறதா? என்ற வகையில் தமிழக ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். இந்த நிகழ்வு ட்விட்டரில் வைரலானதை கவனித்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் அந்த வல்லுனருக்கு கொடுத்த பதிலடி பின்வருமாறு (வீடியோவில் 18வது நிமிடம் முதல்).

“ஜெகதீசனை நிறைய பேர் பாராட்டிய நிலையில் மும்பையைச் சேர்ந்த மக்ராண்ட் வைய்ங்கங்கர் மும்பை கிரிக்கெட் மீது மிகவும் பற்று கொண்டவர். சொல்லப்போனால் இந்தியாவில் இருக்கும் மும்பை மீது எனக்கே பற்று அதிகம் ஏனெனில் அவர்கள் ரஞ்சிக்கோப்பையில் அசால்டாக 38 கோப்பைகளை வென்றவர்கள். ஆனால் தமிழகம் உலக சாதனை படைத்ததால் நாம் மகிழ்ச்சியாக இந்த தருணத்தில் வீட்டுக்குள் குண்டு போடுவது போல் 88 வருட ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் தமிழ்நாடு 2 கோப்பைகளை மட்டுமே வென்றது என அவர் ட்விட் போட்டார்”

“எதற்காக நீங்கள் அப்படி போட்டீர்கள். ரஞ்சிக் கோப்பை நடக்கும் போது அப்படி போடுங்கள். ஆனால் சம்பந்தமின்றி ஏன் இப்போது அப்படி போட்டீர்கள். ஏன் ஜெகதீசன் மகிழ்ச்சியில் மண்ணை அள்ளி போட வேண்டும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அமைதியாக சென்று விடுங்கள். அதற்கு அபினவ் முகுந்த் கொடுத்த பதிலடி எனக்கு மிகவும் பிடித்தது. இப்படி அடுத்தவர்கள் வளர்ச்சியை விமர்சிக்கும் விமர்சனங்களை நாம் வளர விடக்கூடாது” என்று கூறினார்.

Advertisement