வெ.இ வீரரின் கோரிக்கைக்கு கடைசிவரை கைகொடுக்காத சச்சின், தாமாக முன்வந்து உதவிய நிறுவனம் – யுவி, ரெய்னா பாராட்டு

Sachin-2
- Advertisement -

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அங்கு நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை வைத்து வைட்வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரோகித் சர்மா தலைமையில் மேலும் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா 4 – 1 (5) என்ற கணக்கில் கோப்பையை முத்தமிட்டு வெற்றியுடன் நாடு திரும்பியது. ஆனால் சொந்த மண்ணில் இரு தொடர்களிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய துறைகளில் சுமாராக செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது பரிதாபத்திற்குள்ளானது.

கிரிக்கெட் துவங்கப்பட்ட காலத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் செயல்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அந்த காலத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக திகழ்ந்தது. அதிலும் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் அசந்தால் மண்டையை காலி செய்யும் அளவுக்கு வெறித்தனமாக பந்துவீச கூடிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் உலகையே ஆட்சி செய்த அந்த அணி கிளைவ் லாய்ட் தலைமையில் 1975, 1979 ஆகிய வருடங்களில் நடைபெற்ற வரலாற்றின் முதல் 2 ஐசிசி உலகக் கோப்பைகளை அடுத்தடுத்து வென்று முடி சூடா மன்னனாக ஜொலித்தது.

- Advertisement -

ஏழ்மையால் வாட்டம்:
குறிப்பாக 70 மட்டும் 80களில் உலக கிரிக்கெட்டை ஆண்ட அந்த அணிக்கு 90களில் கிடைத்த பிரையன் லாரா போன்ற வீரர்களே கடைசியாக கிடைத்த உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் என்று கூறலாம். ஆம் அவருடைய சகாப்தத்திற்கு பின் தரமான அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் கிடைக்காமல் திண்டாடும் அந்த அணி 2010க்குப்பின் கத்துக்குட்டியாக மாறிப்போனது. 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய பரிணாமத்தை கண்டுள்ள நவீன கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு தங்களது அடிப்படை முதல்தர கிரிக்கெட்டையும் இளம் வீரர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க முடியாத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதே அதற்கு முழுமுதற் காரணமாகும்.

குறிப்பாக ஆண்ட பரம்பரையின் கடைசி தலைமுறையாக மிரட்டிய கிறிஸ் கெயில், ப்ராவோ, பொல்லார்ட், ரசல், நரேன் போன்ற தரமான வீரர்களுக்கு தேவையான சம்பளத்தை கொடுத்து தக்க வைக்க முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கியதை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறலாம். இப்படி அடிப்படையிலேயே பிரச்சனை இருப்பதால் வெஸ்ட் இண்டீசுக்கு விளையாடும் வீரர்கள் தேசத்துக்கு விளையாடுவதை விட ஐபிஎல் போன்ற தொடரில் விளையாட முன்னுரிமை கொடுக்கின்றனர்.

- Advertisement -

சச்சினுக்கு கோரிக்கை:
அந்த நிலைமையில் தங்களது நாட்டில் இருக்கும் இளம் வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆயிரக்கணக்கான டாலர்கள் பணம் வேண்டாம் 10 – 15 பேட் போன்ற உபகரணங்கள் போதுமானது என்பதால் அதை உங்களால் செய்ய முடியுமா என்று முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வின்ஸ்டன் பெஞ்சமின் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கோரிக்கை வைத்தார். மேலும் ஏற்கனவே தங்களுக்கு உதவிய முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனுக்கு மனதார நன்றி தெரிவித்த அவர் வேறு யாராவது உதவ முன்வந்தால் இருகரம் கூப்பி வரவேற்பதாக தெரிவித்தார்.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய டி20 தொடரின் போது அவர் வைத்த அந்த கோரிக்கை ஒட்டு மொத்த ரசிகர்களின் நெஞ்சங்களைக் தொட்டது. அதனால் அவருக்கு சச்சின் உதவி செய்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் அவர் கோரிக்கை வைத்து 2 வாரங்களுக்கு மேலாகியும் எந்த பதிலும் அளிக்கவில்லை. மேலும் தனது ட்விட்டரில் இதர பதிவுகளை சச்சின் போடுவதால் கடைசி வரை அவர் உதவி செய்யப் போவதில்லை என்பதும் தெரிய வருகிறது.

புமாவுக்கு பாராட்டு:
இருப்பினும் உங்களது கோரிக்கை சச்சினுக்கு கேட்டதோ இல்லையோ எங்களுக்கு கேட்டதாக தெரிவித்துள்ள பிரபல விளையாட்டு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனமான “புமா” வின்ஸ்டன் பெஞ்சமின் கேட்ட பேட் மட்டுமல்லாமல் கையுறைகள், காலணிகள் போன்ற கேட்காத உதவிகளையும் தாமாக முன்வந்து செய்வதாக அறிவித்துள்ளது. அந்த உபகரணங்களை பேக் செய்து வெஸ்ட் இண்டீசுக்கு அனுப்பிய புகைப்படத்தை பகிர்ந்துள்ள அந்த நிறுவனம் தற்போது ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது.

அதை முன்னாள் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரும் மனதார பாராட்டியுள்ளனர். முன்னதாக கடந்த வருடம் ஷூ இல்லாமல் ஒவ்வொரு தொடருக்கும் பின்பும் பசை போட்டு ஒட்டும் நிலைமையைத் தவிர்க்க நல்ல ஷூ கிடைக்குமா என்று ஜிம்பாப்வே வீரர் ரியன் புர்ள் கண்ணீர் விட்டு கேட்ட போது இதே புமா நிறுவனம் தாமாக முன்வந்து உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement