ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகளின் முடிவில் 1 – 1* என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் அந்தத் தொடரின் 4வது போட்டி மெல்போர்ன் நகரில் டிசம்பர் 26ஆம் தேதி துவங்குகிறது. முன்னதாக இத்தொடரின் 3வது போட்டியுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றார்.
2010 முதல் விளையாடி வந்த அவர் இந்தியாவுக்காக இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இருப்பினும் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து இந்திய அணி வாய்ப்பு கொடுக்காததால் வருங்கால வீரர்களுக்கு வழி விட்டு அஸ்வின் ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் அஸ்வின் இல்லாதது இந்திய பவுலிங் துறையை மேலும் பலவீனமடைய வைத்துள்ளதாக புஜாரா கவலை தெரிவித்துள்ளார்.
புஜாரா கவலை:
ஏற்கனவே விராட் கோலி, சுப்மன் கில், கேப்டன் ரோஹித் ஆகியோர் தடுமாற்றமாக விளையாடுவதால் பேட்டிங் துறையும் பலவீனமாக இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியின் பவுலிங் கொஞ்சம் பலவீனமாக இருப்பது என்னுடைய மிகப்பெரிய கவலை மற்றும் கேள்வியாகும். பேட்டிங் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. நம்முடைய டாப் 5 பேட்ஸ்மேன்கள் நன்றாக செயல்படவில்லை”
“இருப்பினும் ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் ரெட்டி ஆகியோரால் மிடில் ஆர்டர் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா, ஆகாஷ் தீப் போன்ற டெயில் எண்டர்கள் கூட பேட்டிங்கில் பங்காற்றினார்கள். ஆனால் பந்து வீச்சில் பலவீனம் இருக்கிறது. அதை எப்படி சரி செய்ய முடியும்? ஏனெனில் நீங்கள் நித்தீஷ் ரெட்டியையும் ஜடேஜாவையும் நீக்க முடியாது. எனவே அணியின் கலவை என்னவாக இருக்கும். அஸ்வின் வேறு ஓய்வு பெற்று விட்டார்”
20 விக்கெட்ஸ் எடுக்கணும்:
“எனவே 2 ஸ்பின்னர்கள் மெல்போர்னில் விளையாடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. அதனால் உங்களுடைய பவுலிங்கை எப்படி பலப்படுத்த முடியும்? 3 வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக தெரிகிறார்கள். ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய 4, 5வது பவுலர்களான நித்திஷ் ரெட்டி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களாக இல்லை”
இதையும் படிங்க: அதுக்குள்ள அவுட்டாக்கிடுவாரு.. பும்ராவை அடிக்க இதை செய்ங்க.. ஆஸி பேட்ஸ்மேன்களுக்கு கேட்டிச் அட்வைஸ்
“எனவே நாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டுமெனில் அதற்கு 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். ஆனால் தற்போதுள்ள பவுலர்கள் 20 விக்கெட்டுகளை எடுக்கும் அளவுக்கு நன்றாக இல்லை என்பது போல் தெரிகிறது” எனக் கூறினார். மொத்தத்தில் அஸ்வின் விடைபெற்றதால் அனுபவ வீரர்கள் இல்லை. அதனால் கடந்த போட்டியில் விளையாடிய அதே இந்திய பவுலர்கள் மீண்டும் விளையாடலாம்.



