இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி முதல் துவங்க இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து இந்தத் தொடரிலும் தோல்வி அடைந்தால் பெரும் விமர்சனத்தை சந்திக்கும் என்கிற காரணத்தால் இந்திய அணி இந்த இங்கிலாந்து தொடரை வென்று விட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சீனியர் வீரர்கள் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர்கள் அணியில் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. அதன்படி 3-வது இடத்தில் களம் இறங்கி வரும் புஜாரா கடந்த சில தொடர்களாகவே மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அதனால் அவரை உட்கார வைத்து அவருக்கு பதிலாக ராகுலை விளையாட வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது இந்த மாற்றம் குறித்து நடைபெற்ற டீம் மீட்டிங்கில் விராட்கோலி இதனை புஜாராவிடம் கூறியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி புஜாராவை முழுவதுமாக அணியில் இருந்து நீக்காமல் இரண்டு மூன்று போட்டிகள் அவரை உட்கார வைத்து மீண்டும் அணியில் இணைத்தால் பொறுப்புடன் விளையாடுவார் என்ற காரணத்தினால் கோலி அவரிடம் அவரது இடத்திற்கு பதிலாக ராகுலை இறக்கும் திட்டம் இருப்பதாக கூறினாராம். அதற்கு சட்டெனெ அதிர்ச்சி அடைந்த புஜாரா நான் வேண்டுமென்றால் என் மனைவியுடன் இந்தியா திரும்பட்டுமா ? என்ற ரீதியில் கோபமாக கேள்வி எழுப்பி உள்ளார் என்று கூறப்படுகிறது.

அதன்பிறகு விராட் கோலி நான் உங்களை அணியில் இருந்து முழுவதுமாக நீக்கவில்லை நான் சொல்ல வந்ததை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று புஜாராவை ஆசுவாசப்படுத்தி யதாக கூறப்படுகிறது.



