என்னையா கலாய்ச்சீங்க? 28 போர்ஸ் 11 சிக்ஸ், இங்கிலாந்தில் இரட்டை சதமடித்த பிரிதிவி ஷா – ரோஹித்தை மிஞ்சி அசத்தல் சாதனை

Prithvi Shaw
- Advertisement -

டெல்லியை சேர்ந்த நட்சத்திர இளம் கிரிக்கெட் வீரர் பிரிதிவி ஷா 2018 அண்டர்-19 உலகக் கோப்பை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து மிகச்சிறந்த துவக்கத்தை பெற்றார். அதிலும் சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு அசத்திய அவர் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறினார். குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் லேசாக ஸ்விங் செய்தால் க்ளீன் போல்ட்டாகும் அளவுக்கு தடுமாறிய காரணத்தால் கடந்த 2021 ஜூலையுடன் கழற்றி விடப்பட்ட அவர் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து போராடி வந்தும் தேர்வுக்குழு கண்டு கொள்ளவில்லை.

இருப்பினும் மனம் தளராமல் சற்று உடல் எடையை குறைத்து தொடர்ந்து போராடிய அவர் கடந்த ரஞ்சிக்கோப்பையில் முச்சதம் அடித்து அசத்தியதால் கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்து எதிரான டி20 தொடரில் தேர்வானார். ஆனால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய ஐபிஎல் 2023 தொடரில் மோசமாக செயல்பட்டார்.

- Advertisement -

என்னையா கலாய்ச்சீங்க:
அதனால் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ், ஆசிய விளையாட்டு டி20 தொடர்களில் சேர்க்காததால் பின்னடைவை சந்தித்த அவர் தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் தொடரில் நார்த்தம்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். குறிப்பாக புஜாரா கம்பேக் கொடுத்த வழியை பின்பற்றும் அவர் முதல் போட்டியிலேயே 34 ரன்களில் பேலன்ஸ் செய்ய முடியாமல் ஹிட் விக்கெட் முறையில் பரிதாபமாக அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால் வழக்கம் போல கிண்டல்களை சந்தித்தார்.

அந்த நிலையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி நடைபெற்ற சோமர்செட் அணிக்கு எதிரான 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நார்த்தம்டன்ஷைர் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடிய அவர் சிறப்பாக செயல்பட்டு வேகமாக ரன்களை குவித்தார். அதே வேகத்தில் நேரம் செல்ல செல்ல நங்கூரமாக நின்று எதிரணி பவுலர்களை பந்தாடிய அவர் 150 ரன்கள் கடந்தும் ஓயாமல் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

அவருக்கு உறுதுணையாக எதிர்ப்புறம் எமிலியோ 30, வாஸ்கோன்செல்ஸ் 47, வைட்மேன் 54 என இதர முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களுடைய அணியை வலுப்படுத்தினார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து அவுட்டாகாமல் அடம் பிடித்த பிரித்திவி ஷா இரட்டை சதமடித்தும் ஓயாமல் 28 பவுண்டரி 11 சிக்ஸர்களை பறக்க விட்டு 244 (153) ரன்கள் ஒரு வழியாக கடைசி ஓவரில் தான் பெவிலியன் திரும்பினார்.

அவரது அதிரடியால் 50 ஓவர்களில் நார்த்தம்டன்ஷைர் 415/8 ரன்கள் எடுத்த நிலையில் சோமர்செட் சார்பில் அதிகபட்சமாக ஜாக் ப்ரூக்ஸ் 3 விக்கெட்களை சாய்த்தார். முன்னதாக ஏற்கனவே இந்தியாவில் நடைபெறும் விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் 2021 சீசனில் பாண்டிச்சேரிக்கு எதிராக பிரிதிவி ஷா 227* ரன்கள் அடித்திருந்தார். தற்போது அடித்த 244 ரன்களால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அவர் 1க்கும் மேற்பட்ட இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக 3 இரட்டை சதங்கள் அடித்துள்ள நிலையில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், சுப்மன் கில், இஷான் கிசான் ஆகியோர் சர்வதேச அளவிளான லிஸ்ட் ஏ கிரிக்கெட்டிலும் ஷிகர் தவான், கர்ன் வீர் கவுசல், சஞ்சு சாம்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கைக்வாட், சரத் வியாஸ், நாராயன் ஜெகதீசன் ஆகியோர் உள்ளூர் அளவிலான லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் தலா 1 இரட்டை சதங்கள் அடித்துள்ளனர்.

அதை விட ரோகித் சர்மா இந்தியாவுக்காக இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இரட்டை சதங்கள் அடித்துள்ளார். ஆனால் அவரையும் மிஞ்சியுள்ள பிரிதிவி ஷா லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு அணிகளுக்காக (மும்பை, நார்த்தம்டன்ஷைர்) 2 வெவ்வேறு நாட்டில் (இந்தியா, இங்கிலாந்து) 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Advertisement