இந்தியாவில் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2025 – 26 சீசன் விரைவில் துவங்க உள்ளது. அத்தொடருக்கு தயாராகும் நோக்கத்தில் பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மும்பை மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய 3 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி புனே நகரில் நடைபெறுகிறது.
அந்தப் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக இளம் வீரர் பிரித்வி ஷா பேட்டிங் செய்தார். 2018 ஐசிசி அண்டர் 19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்ற அவர் இந்தியாவுக்காக சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதத்தை அடித்து சாதனைப் படைத்த அவரை சச்சின், சேவாக், லாரா ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார்.
சதமடித்த பின் சண்டை:
இருப்பினும் அந்தப் பெயரை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு நாளடைவில் சொதப்பிய பிரிதிவி ஷா இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அடுத்ததாக ஐபிஎல் தொடரிலும் சுமாராக விளையாடிய அவரை டெல்லி அணி கழற்றி விட்டது. பின்னர் ஐபிஎல் ஏலத்திலும் எந்த அணியும் வாங்காத அவர் உள்ளூரிலும் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவிக்கவில்லை.
இதற்கிடையே ஊக்க மருந்து உட்கொண்டதற்காக ஒரு வருடம் தடை பெற்ற அவர் தவறான நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு நன்னடத்தையை இழந்தார். அதனால் மும்பை அணிக்காக விளையாடும் வாய்ப்பையும் தவற விட்ட பிரித்திவி ஷா தற்போது அந்த அணியிலிருந்து வெளியேறி மகாராஷ்டிராவுக்காக விளையாடத் துவங்கியுள்ளார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்த அவர் சதத்தை எடுத்து 181 ரன்கள் குவித்தார்.
தடுத்த நடுவர்கள்:
அப்போது இரட்டை சதத்தை நெருங்கிய அவர் முஷீர் கான் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். மறுபுறம் விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் முஷீர் கான் ஆக்ரோசமாக கொண்டாடியுள்ளார். அதைப் பார்த்து கடுப்பான ப்ரித்திவி ஷா வாய்மொழியால் பதிலடி கொடுத்ததுடன் முஷீர் கானை அடிப்பதற்காக பேட்டை சுழற்றினார்.
இதையும் படிங்க: எப்படியாச்சும் வாங்க ப்ளீஸ்.. இந்தியாவிடம் அடி வாங்கிய பாகிஸ்தான்.. ரசிகர்களை ஈர்க்க புதிய அறிவிப்பு
அதிர்ஷ்டவசமாக முஷீர் கான் கொஞ்சம் இடைவெளியில் இருந்ததால் பேட் படவில்லை. இன்னும் அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையை இரு அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் நடுவர்கள் உள்ளே புகுந்து நிறுத்தினார்கள். இறுதியில் ஒரு நடுவர் பெவிலியன் நோக்கி செல்லுமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து பிரித்திவி அங்கிருந்து நடையைக் கட்டினார். சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் பிரிதிவி ஷா முதலில் நமது நடத்தையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.



