இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவும் இடம் பிடித்திருந்தார். ஆனால் பணிச்சுமை காரணமாக இந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் அவரால் விளையாட முடியாது என்றும் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்றும் ஏற்கனவே இந்திய அணியின் நிர்வாகம் அறிவித்துவிட்டது.
பும்ராவுக்கு பதில் வெளியேறப்போவது யார்? :
அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக லீட்ஸ் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் விளையாடிய பும்ரா மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். ஆனாலும் அந்த போட்டியின் போது நிறைய ஓவர்களை அவர் வீசிவிட்டதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு பர்மிங்காமில் நகரில் நடைபெற்று முடிந்த இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.
பும்ரா இல்லை என்றாலும் இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இதற்கு அடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 10-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் மீண்டும் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாட இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரண்டாவது போட்டியின் முடிவிலேயே அறிவித்துவிட்டார். இதன் காரணமாக மூன்றாவது போட்டிக்கான இந்திய அணிக்குள் பும்ரா வரும் பட்சத்தில் அவருக்கு பதிலாக வெளியேறப்போகும் அந்த வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில் தற்போதைய பிளேயிங் லெவனில் பும்ராவிற்கு பதிலாக மாற்றுவீரராக இடம்பெற்ற ஆகாஷ் தீப் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதால் அவர் நீக்கப்பட வாய்ப்பு இல்லை. எனவே அவருக்கு பதிலாக சிராஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகிய இருவரில் ஒருவர் வெளியேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் பார்க்கையில் சிராஜ் எப்போதும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாலும் அவருக்கு டெஸ்ட் போட்டியின் மீதுள்ள ஈர்ப்பு காரணமாகவும் அவரை வெளியேற்ற முடியாது.
இதையும் படிங்க : பும்ராவுக்கு பதிலாக வந்து.. இங்கிலாந்தில் பும்ராவே செய்யாத 39 வருட சாதனையை நிகழ்த்திய ஆகாஷ் தீப்
அதேவேளையில் டெஸ்ட் போட்டியில் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கிவரும் பிரசித் கிருஷ்ணா வெளியேற்ற வேண்டும் என்று ஏற்கனவே பேச்சுகள் இருந்து வரும் வேளையில் இந்த இரண்டாவது போட்டியிலும் அவரது பந்துவீச்சு சுமாராகவே இருந்ததால் அவர் வெளியேற்றப்பட்டு பும்ரா அந்த இடத்திற்கு வருவார் என்று தெரிகிறது.



