
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது கடந்த டிசம்பர் மாதம் அபுதாபியில் நடைபெற்று முடிந்தது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்றிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அனுபவ வீரர்கள் பலரை விலைக்கு வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் முதல் முறையாக இளம் வீரர்கள் மீது அதிக முதலீடு செய்து அவர்களை நம்பி ஏலத்தில் எடுத்திருந்தது.
அந்த வகையில் ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டதால் அவரைப் போல பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டையும் ஈடு செய்யும் ஒரு வீரரை தேர்வு செய்ய நினைத்தது. அந்த வகையில் 20 வயதான பிரசாந்த் வீர் என்கிற ஆல்ரவுண்டரை 14.2 கோடி என்கிற மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் வாங்கியது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஏனெனில் ரவீந்திர ஜடேஜாவிற்கு சரியான மாற்றுவீராக பார்க்கப்படும் அவர் இடதுகை ஆல்ரவுண்டர் என்பதனால் அவரை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து எடுத்தது. தனது முதல் பயணத்தை அவர் இந்த ஐபிஎல் தொடரில் துவங்க இருக்கிறார். இந்நிலையில் எம்.எஸ் தோனி உடனான தமது முதல் சந்திப்பு குறித்து பிரசாந்த் வீர் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நான் தோனியை முதல் முறையாக சந்தித்தபோது கிரிக்கெட் குறித்து நிறைய பேசிக் கொள்ளவில்லை. ஆனால் எனக்கு அவர் பணரீதியாக சில அறிவுரைகளை வழங்கியிருந்தார். அதாவது உனக்கு கிடைத்திருக்கும் இந்த மிகப்பெரிய தொகையை தேவையில்லாமல் வீணாக செலவழிக்க கூடாது என்றும் உனக்கு கிடைத்துள்ள இந்த பணத்தை பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும் என்று நிதி ரீதியாக தோனி எனக்கு மிகவும் அக்கறையுடன் ஆலோசனைகளை வழங்கியிருந்தார் என பிரசாந்த் வீர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : தற்போதைய இந்திய டி20 அணிதான்.. பெஸ்ட் எவர் டி20 அணி.. அதை யாராலும் மறுக்க முடியாது – பாண்டிங் பாராட்டு
உத்தரபிரதேச டி20 லீக் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரசாந்த் வீர் 10 போட்டிகளில் விளையாடி 64 ரன்கள் சராசரியுடன் 320 ரன்கள் குவித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தவே அவரை சென்னை அணி தங்களது அணிக்கு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.