ஐசிசி டி20 உலகக் கோப்பையை 17 வருடங்கள் கழித்து இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதனால் சரித்திரம் படைத்த இந்திய அணிக்கு ஜூலை 4ஆம் தேதி மும்பையில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் 2007 போல திறந்தவெளி பேருந்தில் கோப்பையுடன் பேரணியாக வந்த இந்திய அணியினர் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடினர். அதை தொடர்ந்து வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சார்பில் அவர்களுக்கு பாராட்டு விழாவும் பரிசுத் தொகையும் கொடுக்கப்பட்டது. அதற்கு முன்பாக நாடு திரும்பியதும் பிரதமர் நரேந்திர மோடியை இந்திய அணியினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
குல்தீப் செயல்:
அப்போது 2024 டி20 உலகக் கோப்பையை வித்தியாசமான நடனம் ஆடிக்கொண்டே சென்று வாங்குங்கள் என்று ரோகித் சர்மாவிடம் ஏன் சொன்னீர்கள்? என குல்தீப் யாதவிடம் பிரதமர் மோடி கேட்டார். அதாவது டபிள்யூடபிள்யூஈ மல்யுத்த மூத்த வீரர் ரிக் ஃபிளேர் போல வித்தியாசமாக நடந்து சென்று கோப்பையை வாங்குங்கள் என்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் விருது கொடுக்கும் விழாவில் குல்தீப் யாதவ் சொன்னார்.
அதே போலவே ரோகித் சர்மாவும் நடந்து சென்று வாங்கியது ரசிகர்களை கவர்ந்து வைரலானது. அது பற்றி பிரதமர் மோடி சிரித்த வாக்கில் கேட்டது பின்வருமாறு. “கேப்டனை எந்த தைரியத்தில் நீங்கள் நடனமாட வைத்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு குல்தீப் பதில் கொடுத்தது பின்வருமாறு. “நான் கேப்டனை நடனம் ஆட வைக்கவில்லை. அவரிடம் இதை செய்யுமாறு மட்டுமே சொன்னேன்”
“இருப்பினும் நான் சொன்னது போல் அவர் அதைச் செய்யவில்லை. இந்தியாவுக்காக நான் விளையாடுவதை விரும்புகிறேன். என்னுடைய நாட்டுக்காக உயர்தரத்தில் அசத்துவது என்னுடைய கௌரவமாகும். அணியில் அட்டாக் செய்யக்கூடிய ஸ்பின்னராக விளையாடுவது எனக்கு கொடுக்கப்பட்ட வேலையாகும். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற வேலையை கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் எனக்கு கொடுத்துள்ளனர்”
இதையும் படிங்க: சூர்யகுமாரை பேசுவதற்கு முன் உங்களோட 10 சீட்டிங் பத்தியும் பேசுங்க.. ஆஸி ஊடங்களுக்கு கவாஸ்கர் பதிலடி
“நான் இதுவரை 3 உலகக் கோப்பைகள் விளையாடியுள்ளேன் ஆனால் இப்போது தான் முதல் முறையாக வென்றுள்ளேன்” என்று கூறினார். முன்னதாக இந்த உலகக் கோப்பையில் குல்தீப் யாதவ் 5 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை அசத்தினார். அந்த வகையில் முதன்மை ஸ்பின்னராக சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.



