
சர்வதேச கிரிக்கெட்டில் பல அணிகள் ஒரு உலகக் கோப்பையை வெல்வதற்கே திண்டாடும் நிலையில் ஆஸ்திரேலியா மட்டும் 5 கோப்பைகளை வென்று அலமாரியில் அடுக்கி வைத்துள்ளது. தோல்வியின் பிடியில் சிக்கினாலும் மீண்டெழுந்து போராட வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றுவதே ஆஸ்திரேலியாவின் வெற்றிகளுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிப்பதெல்லாம் வெளிநாடுகளுக்கு சிம்ம சொப்பனமாகும். அதனாலேயே ஆஸ்திரேலிய மண்ணில் சுமார் 70 வருடங்கள் டெஸ்ட் தொடரை வெல்ல முடியாமல் இந்தியா திண்டாடியது. இருப்பினும் அந்த வரலாற்றை மாற்றி எழுதிய விராட் கோலி தலைமையிலான இந்தியா 2018/19 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலிய மண்ணில் வென்று புதிய சரித்திரம் படைத்தது.
அதை விட 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் முதல் போட்டியிலேயே 36க்கு ஆல் அவுட்டான இந்தியா படுதோல்வியை சந்தித்தது. அப்போது நாடு திரும்பிய விராட் கோலிக்கு பதிலாக ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. குறிப்பாக கடைசி போட்டியில் இளம் வீரர்களை வைத்தே ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையாக கருதப்படும் காபா மைதானத்தில் தோற்கடித்து இந்தியா சாதனை வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவை காபாவில் இந்தியா தோற்கடித்தது உண்மையாகவே சாதனை என்று அவர் பெருமை தெரிவித்துள்ளார். வேண்டுமானால் ஆஸ்திரேலியாவில் வெல்வது எவ்வளவு கடினம் என்பதை தற்போதைய ஆஷஸ் தொடரில் 0 – 3* (5) என்ற கணக்கில் தோற்றுள்ள இங்கிலாந்திடம் கேட்கலாம் என்றும் அவர் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
இது பற்றி ரோஹித் பேசியது பின்வருமாறு. “நாங்கள் 2021இல் ஆஸ்திரேலியாவில் நடந்த காபா டெஸ்ட் போட்டியை வென்றோம். அங்கே ரிசப் பண்ட் அற்புதமாக விளையாடினார். அது இந்தியா வெற்றி பெறும் என்று யாருமே நம்பாத சூழ்நிலையில் கிடைத்த வெற்றியாகும். அப்போட்டியில் எங்களுடைய முதன்மை வீரர்கள் பல்வேறு காரணங்களுக்காக விளையாடவில்லை. அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பைன் காபாவுக்கு வாருங்கள் என்று சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது”
இதையும் படிங்க: விராட், ரோஹித் விளையாடும்.. 2 விஜய் ஹசாரே போட்டிகளை எந்த சேனலில் பார்க்கலாம்? தேதி விவரம் இதோ
“அவருடைய கருத்து ஏன் இவர் இப்படி சொல்கிறார்? என்று எங்களை சிந்திக்க வைத்தது. அப்போட்டி துவங்கிய போது எங்களுக்காக 3 வீரர்கள் அறிமுகமானவர்கள். காபா மைதானம் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக இருந்தது. அங்கே வெற்றி பெற முடியாது என்ற நிலையிலிருந்து நாங்கள் வென்றோம். டெஸ்ட் கிரிக்கெட் எளிதல்ல என்பது உங்களுக்குத் தெரியும். அதுவும் ஆஸ்திரேலியாவில் விளையாடுவது கடினமான சவாலாகும். அதைப் பற்றி நீங்கள் இங்கிலாந்திடம் கேட்கலாம். எனவே ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது எங்களுக்கு மிகப்பெரிய சாதனை” என்று கூறினார்.