37 வயதிலும் அசத்தும் தினேஷ் கார்த்திக்கின் ரகசியம் இதுதான் – அவரது வழியை விராட் கோலி பின்பற்ற கோரும் ரசிகர்கள்

Virat Kohli Dinesh Karthi RCB
Advertisement

ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அப்போட்டியில் ரோகித் சர்மா 15 ஓவர்கள் வரை விளையாடி 64 ரன்கள் குவித்தாலும் மிடில் ஆர்டர் சொதப்பியதால் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி நேரத்தில் பட்டைய கிளப்பும் வகையில் பேட்டிங் செய்த தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் 41* (19) ரன்கள் விளாசி காப்பாற்றினார்.

Dinesh Karthik 1

அதன் காரணமாகவே ஆட்டநாயகன் விருது வென்ற அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 37 வயதுக்குப் பின் அதிக ரன்கள் மற்றும் அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற இந்திய வீரர் என்ற அபார சாதனையுடன் அசத்தலாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2004இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவருக்கு அதே காலகட்டத்தில் எம்எஸ் தோனி இருந்த காரணத்தால் தொடர்ச்சியான வாய்ப்புகளும் ஆதரவும் கிடைக்காமலே போனது. கடைசியாக கடந்த 2019 உலக கோப்பையிலும் சுமாராக செயல்பட்ட அவரை அதன்பின் அணி நிர்வாகமும் மொத்தமாக கழற்றிவிட்டது.

- Advertisement -

37 வயதிலும் அசத்தல்:
இருப்பினும் மனம் தளராத அவர் ஐபிஎல் தொடரிலும் தமிழகத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விஜய் ஹசாரே, சயீத் முஷ்டாக் அலி போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். ஆனாலும் அவரை தேர்வுக்குழு கண்டுகொள்ளாத நிலையில் ஒரு கட்டத்தில் கடந்த 2021இல் வர்ணனையாளராக செயல்பட்ட அவரின் இந்திய கிரிக்கெட் கேரியர் முடிந்து விட்டதாக அனைவரும் நினைத்தனர். ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் தன்னால் சாதிக்க முடியும் என்று நினைத்த தினேஷ் கார்த்திக் வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடுமையான பயிற்சிகளை எடுத்தார்.

Dinesh-Karthik

அதை ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக கடைசி நேரத்தில் களமிறங்கி 330 ரன்களை 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் விளாசி செயலில் காட்டிய அவர் 3 – 4 வெற்றிகளை தனி ஒருவனாக பெற்றுக்கொடுத்து சிறந்த பினிஷராக தன்னை நிரூபித்தார். அதன் காரணமாக 3 வருடங்கள் கழித்து தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் விளையாட கிடைத்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டு கம்பேக் கொடுத்த அவருக்கு ரோகித் சர்மா – ராகுல் டிராவிட் ஆதரவும் இருப்பதால் வரும் டி20 உலக கோப்பையில் விளையாடுவதற்கான இடம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

- Advertisement -

வெற்றியின் ரகசியம்:
இப்படி 37 வயதில் பெரும்பாலான கிரிக்கெட் வீரர்கள் ஓய்வை அறிவிக்கும் சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் வெற்றிகரமாக செயல்படுவது அனைவருக்கும் ஆச்சரியமாக அமைகிறது. இந்நிலையில் ஐபிஎல் மற்றும் தமிழகத்திற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியது போக மதுரை, தேனி போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கிளப் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக பங்கேற்று பார்மை குறையாமல் பார்த்துக்கொள்வதே அவரது வெற்றியின் ரகசியம் என தெரியவருகிறது. இதுபற்றி பிரபல இஎஸ்பிஎன்கிரிக்இன்போ இணையத்தில் வெளியான செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது பின்வருமாறு.

“ஐபிஎல் 2022 தொடருக்கு முன்பாக சென்னையில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் தேனிக்கு சென்று இந்தியா சிமெண்ட்ஸ் கிளப் அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடினார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக கடினமான பிட்ச்களில் பேட்டிங் செய்தார். இதுபோன்ற முயற்சியும் கடினமான பயிற்சிகளும் தான் 37 வயதில் தன்னை முடிந்துபோனவர் எனக்கூறியவர்களின் கருத்துக்களை பொய்யாக்கும் அவரின் செயல்பாடுகளுக்கு காரணமாகும்” எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஐபிஎல் 2022 தொடருக்கு முன்பாக மதுரைக்கு சென்று கிளப் போட்டிகளில் தினேஷ் கார்த்திக் விளையாடினார் என்று முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் தினேஷ் கார்த்திக்க்கு இருக்கும் தகுதிக்கும் நட்சத்திர அந்தஸ்துக்கும் அவர் கிளப் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் கிடையாது. ஆனாலும் இந்தியாவுக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்ற லட்சியத்துக்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாய்ப்பு கிடைக்கும் அத்தனை உள்ளூர் க்ளப் போட்டிகளிலும் விளையாடுவதே சர்வதேச அரங்கில் 37 வயதில் அவர் ஜொலிப்பதற்கான வெற்றியின் ரகசியமாக இருக்கிறது.

Virat-Kohli

நாட்டுக்காக தினேஷ் கார்த்திக்கும் இதை எந்த வித தயக்கமும் இல்லாமல் செய்கிறார் என்பது பாராட்ட வேண்டிய அம்சமாகும். இதை அறியும் ரசிகர்கள் நட்சத்திர அந்தஸ்தையும் கௌரவத்தையும் பார்க்காமல் உள்ளூர் கிரிக்கெட்டில் சென்று கடுமையாக உழைத்து முயற்சித்தால் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவித்து வரும் கதைக்கு விராட் கோலி எளிதாக முற்றுப்புள்ளி வைத்துவிடலாமே என்று சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கின்றனர்.

Advertisement