இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படத் துவங்கியுள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கேப்டனாகவும் ஆலோசகராகவும் 3 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவத்தை கொண்டுள்ளார். அதனால் ராகுல் டிராவிட்டுக்குப் பின் அவரை பிசிசிஐ இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமனம் செய்துள்ளது.
அவருடைய வழி காட்டுதலில் இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. முன்னதாக கௌதம் கம்பீர் மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடிய கோபம் நிறைந்த மனிதராகவே அறியப்படுகிறார். ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடிய போது ஷாஹித் அப்ரிடியுடன் சண்டையிட்ட அவர் ஐபிஎல் தொடரில் விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்தார்.
கோபமான கம்பீர்:
அத்துடன் வர்ணனையாளராக தோனியை பற்றி பல அதிரடி கருத்துகளை தெரிவித்த அவர் பயிற்சியாளராக இறுக்கமான முகத்துடன் வலம் வருவது வாடிக்கையாகும். இந்நிலையில் கௌதம் கம்பீர் பார்ப்பதற்கு தான் கோபமான மனிதராக தெரிவார் என்று முன்னாள் வீரர் பியூஸ் சாவ்லா தெரிவித்துள்ளார். மேலும் கம்பீர் தலைமையில் தொடர்ந்து 9 வெற்றிகளுடன் 2014 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா வென்றதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “களத்தில் கௌதம் கம்பீர் கோபமான வீரரை போல் தெரியலாம். ஆனால் களத்திற்கு வெளியே அவர் மிகவும் சாதூரியமான நபர். அது தான் அவரைப் பற்றிய சிறந்த விஷயமாகும். நீங்கள் அதை கோபம் என்றழைக்க முடியாது. அதை ஆக்ரோஷம் மற்றும் ஆர்வம் என்று சொல்லலாம். சில வீரர்கள் அதைக் களத்தில் காண்பிக்க மாட்டார்கள்”
9க்கு 9 வெற்றி:
“சிலர் அதை வெளிப்படையாக காண்பிப்பார்கள். தன்னம்பிக்கை இல்லாமல் 2014 ஐபிஎல் கோப்பையை அவருடைய தலைமையில் நாங்கள் தொடர்ந்து 9 வெற்றிகளுடன் வென்றிருக்க முடியாது. அந்த வெற்றியில் அனைவருமே முக்கிய பங்காற்றினர். 2014 சீசனை பொறுத்த வரை நான், சுனில் நரேன், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் ஸ்பின்னர்களாக இருந்தோம். நரேன் பேட்டிங் செய்ய மாட்டார்”
இதையும் படிங்க: கூலான தோனி, குருநாதர் மார்ஷ்.. உலகின் டாப் 3 தரமான விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுத்த கில்கிறிஸ்ட் பேட்டி
“ஷாகிப் பேட்ஸ்மேனாக இருந்தார். யூசுப் தான் தேவைப்படும் போது பந்து வீசினார். மனிஷ் பாண்டே மற்றும் உத்தப்பா பேட்டிங்கில் அபாரமாக விளையாடினர். கௌதம் கம்பீர் பாய் நன்றாக துவங்கவில்லை என்றாலும் முக்கிய நேரத்தில் அடித்தார். டி20 கிரிக்கெட்டில் சதத்தை விட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அரை சதம் முக்கியம். அதை கம்பீர் செய்தார். அப்படி அந்த வெற்றிக்கு அனைவருமே முக்கிய பங்காற்றினார்கள்” என்று கூறினார்.



