வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பியுள்ளது. வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெற்ற இந்த தொடர் மட்டுமல்லாது கடந்த வருடம் துபாயில் நடந்த டி20 உலகக்கோப்பையில் லீக் சுற்றுடன் வெளியேறிய பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் இந்தியா வெற்றிநடை போட்டு வருகிறது. இதனால் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் கொண்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வெல்லுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதற்காக தரமான வீரர்களை கண்டறிந்து வரும் இந்திய அணி நிர்வாகம் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் அசத்திய அரஷ்தீப் சிங், தினேஷ் கார்த்திக் என திறமையை வெளிப்படுத்திய யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி வாய்ப்பு கொடுத்து சோதித்து வருகிறது. இதில் கடந்த 2019 உலக கோப்பையில் கடைசியாக விளையாடி ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக அவதரித்ததால் இந்திய கேரியர் முடிந்து விட்டதாக கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பையை இந்தியாவுக்கு வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் கடினமான பயிற்சிகளை எடுத்து ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூரு அணிக்காக 330 ரன்களை 183.33 என்ற உச்சபட்ச ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி மிகச்சிறந்த பினிஷராக நிரூபித்தார்.
இடம் கிடைக்குமா:
அதனால் 3 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு விளையாடும் வாய்ப்பு தேடி வந்ததில் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அசத்திய அவர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் முதல் போட்டியில் 41* ரன்கள் விளாசி இந்தியாவை வெற்றி பெற வைத்து முடிந்தளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதுவும் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ள அவர் 37 வயதுக்கு பின் 2 ஆட்டநாயகன் விருதுகளையும் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையுடன் கடைசி 4 ஓவர்களில் விளையாடும் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக தன்னை நிரூபித்து வருகிறார்.
அதனால் நல்ல பார்மில் இருக்கும் அவருக்கு ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் போன்ற இளம் விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய வீரர்கள் விளையாடினாலும் பினிஷராக விளையாடும் வாய்ப்பை கேப்டன் ரோகித் சர்மா பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் கொடுப்பார்கள் என்று அனைவரும் நம்புகின்றனர். ஆனால் வெறும் பினிசிங் செய்வதற்காக மட்டுமே ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யப்பட்டால் அது தவறான அணுகுமுறை என்று முன்னாள் இந்திய வீரர் விவேக் ராஸ்டன் தெரிவித்துள்ளார்.
பாண்டியா இருக்காங்களே:
மிடில் ஆர்டரில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரும் பினிஷிங் செய்யும் திறமை பெற்றிருப்பதால் இந்திய அணியில் ஒரு முக்கிய இடத்தை வீணடிக்காத வகையில் அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் யோசித்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இது பற்றி இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் வர்ணனையாளராக செயல்பட்ட அவர் பேசியது பின்வருமாறு.
“தினேஷ் கார்த்திக்கை வெறும் ஃபினிஷராக மட்டும் தேர்வு செய்வது என்னை பொறுத்தவரை சரியான முடிவாக தோன்றவில்லை. அவருக்காக நீங்கள் ஒரு இடத்தை தடுக்கிறீர்கள். மேலும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா ஆகியோரில் யாருக்காவது பினிஷிங் செய்யும் வேலை தெரியாதா? என்று என்னிடம் கூறுங்கள். அத்துடன் பினிஷர் வேலையில் மட்டும் தான் எவ்வளவு முயற்சித்தாலும் ஒருவரால் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட முடியாது”
“அந்த இடத்தில் ஒவ்வொரு முறையும் நீங்கள் களமிறங்கும் போது உங்களால் அணியின் வெற்றியில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாடும் திறமை வேண்டும். அது இருபுறங்களிலும் வேலை செய்யும். மேலும் பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனத்துடன் முடிந்தளவுக்கு உங்களை காற்றில் அடிக்க வைத்து கேட்ச் கொடுக்க வைப்பார்கள். அது போன்ற அம்சங்கள் அந்த வேலையை சிறப்பாக செய்ய மேலும் கடினத்தை கொடுக்கும்” என்று கூறினார்.
அதாவது பினிசிங் செய்வதற்காக மட்டும் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்யக்கூடாது ஏனெனில் அதை செய்வதற்கு ஹர்திக் பாண்டியா போன்ற நிறைய வீரர்கள் அணியில் இருப்பதாக விவேக் ராஸ்டன் கூறியுள்ளார். வேண்டுமானால் விக்கெட் கீப்பிங் செய்யும் எண்ணத்துடன் அவரை தேர்வு செய்யலாம் ஆனால் வெறும் பினிஷிங் செய்வதற்காக மட்டும் தேர்வு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.



