
இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வந்தது. அப்போது 2022இல் கேப்டனாக பொறுப்பேற்ற ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் விராட் கோலியை விட ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்ற அவர் கேப்டனாக பெரிய அனுபவத்தைக் கொண்டவர்.
ஆனால் அவரது தலைமையிலும் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலகக்கோப்பையில் செமி ஃபைனல் வரை சென்ற இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது. அப்போது சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை ரோஹித் சர்மா உருவாக்கினார். அந்த அணுகுமுறையில் 2023 உலகக் கோப்பையில் எதிரணிகளை தெறிக்க விட்ட இந்தியா 10 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இறுதிப்போட்டிக்கு சென்று தோற்றது.
அதற்காக அசராத இந்தியா அடுத்து நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வெற்றி வாகை சூடியது. அதே வேகத்தில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இந்தியா கோப்பையை முத்தமிட்டது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து புதிய ட்ரெண்டை உருவாக்கியதாக அந்நாட்டு வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 2022 டி20 உலகக் உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் சந்தித்த தோல்விக்கு பின் இந்தியா புதிய ட்ரெண்ட் செட்டராக மாறியுள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி சால்ட் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை செமி ஃபைனலில் நாங்கள் வென்றோம். அப்போதிலிருந்து நாங்கள் உலக கிரிக்கெட்டுக்கு சில வருடங்கள் ட்ரெண்ட் செட்டராக இருந்தோம்”
“நாங்கள் அன்றைய இரவு விளையாடிய விதம் அற்புதமானது. 3வது இடத்தில் விளையாடிய எனக்கு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. ஏனெனில் ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் டாப் ஆர்டரில் அடித்து நொறுக்கினார்கள். கவனமின்றி விளையாடிய அவர்களால் அன்றிரவு எங்களை யாராலும் நிறுத்த முடியவில்லை. அது பல வருடங்களாக சரியான பாதையில் நாங்கள் உழைத்ததற்கான வெளிப்பாடாகும்”
இதையும் படிங்க: தெ.ஆ அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ
“அப்போதிலிருந்து இந்தியா மாற்றத்தை செய்து உலக டி20 கிரிக்கெட்டின் ட்ரெண்ட் செட்டராகி அனைவரையும் முன்னின்று வழி நடத்துகிறார்கள் என்று கருதுகிறேன். அதை 2024 டி20 உலகக் கோப்பையில் கயானாவில் நடைபெற்ற செமி ஃபைனல் மீண்டும் காண்பித்தது. அன்றைய நாளில் அந்த மைதானத்தில் இந்தியா மிகவும் தீவிரமாக பேட்டிங் செய்தனர். அப்படி நிலைமைகள் எப்போது மாறிக்கொண்டே இருக்கிறது. நாங்கள் மீண்டும் மேலே வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்புகிறோம்” என்று கூறினார்.