பயப்படுறவங்களுக்கு என்னோட ரிஸ்க் செட்டாகாது.. சுனில் நரேன் அதிகம் பேசமாட்டாரு.. பில் சால்ட் பேட்டி

- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரின் 47வது லீக் போட்டியில் டெல்லியை 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. ஏப்ரல் 29ஆம் தேதி ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி சுமாராக விளையாடி 154 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35* ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதைத் தொடர்ந்து சேசிங் செய்த கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக பில் சால்ட் 68, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 33* ரன்கள் அடித்து 16.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் டெல்லி சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

கொல்கத்தா ஜோடி:

இந்த போட்டியில் பில் சால்ட் – சுனில் நரேன் ஆகியோர் மீண்டும் 6 ஓவரில் 79 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இந்த வருடம் முழுவதும் இப்படி எதிரணிகளை பந்தாடும் இந்த ஜோடியில் பகுதி நேர பேட்ஸ்மேனான நரேன் சதமடித்து 300க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

அதே போல இங்கிலாந்து துவக்க வீரர் பில் சால்ட் எதிரணிகளை அடித்து நொறுக்கி ஒவ்வொரு போட்டியிலும் நல்ல துவக்கத்தை கொடுத்து வருகிறார். இந்நிலையில் தாம் எப்போதுமே பேட்டிங்கில் அதிக ரிஸ்க் எடுத்து விளையாடுவதாக பில் சால்ட் கூறியுள்ளார். மேலும் சுனில் நரேன் போட்டிகளைப் பற்றி பேசாமல் அதிகமாக சிந்தித்து செயல்படுவார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

“வெற்றியில் பங்காற்றியது நல்லது. சொந்த ஊரில் நடைபெறும் போட்டிகளில் நாங்கள் நல்ல வெற்றிகளை பெற்று வருகிறோம். கடந்த போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டு வந்துள்ளோம். குறிப்பாக எங்களுடைய பவுலர்கள் இது போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தியதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. எதிரணிகளை அட்டாக் செய்யும் என்னுடைய அணுகுமுறை அதிக ரிஸ்க் கொண்டது”

இதையும் படிங்க: லெஜெண்ட் லசித் மலிங்காவின் ஆல் டைம் சாதனையை உடைத்த சுனில் நரேன்.. ஐபிஎல் தொடரில் புதிய சாதனை

“அதற்கு தகுந்தாற்போல் அது ஆட்டத்தை சாதகமாகவும் மாற்றும். ஒருவேளை நீங்கள் பயந்து அதை விரும்பவில்லை என்றால் ரிஸ்க் எடுக்காதீர்கள். நானும் சுனில் நரேனும் போட்டிக்கு முந்தைய நாள் பேசுவோம். சுனில் நரேன் அதிகம் பேச மாட்டார். ஆனால் போட்டியை பற்றி அதிகமாக சிந்திப்பார். எனவே எங்கள் இருவரில் ஒருவர் அதிரடியாக விளையாடினால் அந்த ஸ்ட்ரைக் ரேட் மற்றவருக்கு உதவும். அந்த வகையில் நாங்கள் இருவரும் ஒரே மாதிரியான பக்கத்தில் இருப்பது மிகவும் நல்லது” என்று கூறினார்.

Advertisement