ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இப்போதே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடைசியாக சவாலான ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் காணாத சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கு போராட உள்ளது.
மறுபுறம் இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து இம்முறை ஆஸ்திரேலியா வெல்லும் என்று கேப்டன் பட் கமின்ஸ் ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக தமது தலைமையில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றதாக பட் கமின்ஸ் கூறியுள்ளார். ஆனால் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை மட்டும் இதுவரை வென்றதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அழுத்தத்தில் இந்தியா:
ஏனெனில் 2014க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி இதுவரை பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்றதில்லை. எனவே இம்முறை இந்தியாவை வீழ்த்தி தம்முடைய கேரியரில் சாதிக்காத பார்டர் – கவாஸ்கர் கோப்பை வெற்றியை சாதிப்பேன் என்று கமின்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணி தற்போது 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் தோற்றுள்ளதாக கமின்ஸ் கூறியுள்ளார்.
அதனால் சொந்த மண்ணிலேயே அடி வாங்கியுள்ளதால் எக்ஸ்ட்ரா அழுத்தத்தில் தள்ளப்பட்டுள்ள இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் கூறியுள்ளார். இது பற்றி சிட்னியில் “டெஸ்டட்” எனும் தனது புத்தக வெளியீட்டு விழாவில் கமின்ஸ் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சந்தித்துள்ள தோல்வி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு பூஸ்ட்டாக இருக்கும் என்று நம்புகிறேன். எப்போதுமே நீங்கள் எதிர்கொள்ளும் எதிரணி அழுத்தத்தின் கீழ் இருப்பது மோசமான விஷயமல்ல”
கமின்ஸ் நம்பிக்கை:
“ஆனால் அவர்கள் இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் நன்றாக விளையாடி வென்றுள்ளார்கள். எனவே அவர்களை அமைதியாக வைத்திருக்க முயற்சிப்பதே எங்களுடைய வேலையாகும். பின்னர் விஷயங்கள் எப்படி செல்கிறது என்பதைப் பார்ப்போம். இந்தியாவுக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பதே எனது கேரியரில் நிரப்ப வேண்டிய மிகப்பெரிய விஷயமாகும்”
இதையும் படிங்க: லெஜெண்ட்டாக உருவாகி வராரு.. இந்த பையன் வருங்காலத்தில் ஜாம்பவானா வருவாரு.. மனோஜ் திவாரி பாராட்டு
“குறிப்பாக சொந்த மண்ணில் அவர்களுக்கு எதிராக வெல்ல விரும்புகிறோம். நான் உட்பட பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் சொந்த மண்ணில் நன்றாக செயல்படுவதையே எதிர்பார்ப்போம். அவர்கள் எங்ககளுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 தொடர்களை வென்றனர். எனவே இம்முறை இது பெரிய தொடர். இம்முறை எங்களுடைய அணி நல்ல இடத்தில் இருப்பதாக கருதுகிறோம். அதனால் இம்முறை நாங்கள் சிறப்பாக செயல்படாமல் போவதற்கு எந்த காரணமும் இல்லை” என்று கூறினார்.



