ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நிலை வீரருமான பேட் கம்மின்ஸ் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடர் குறித்து தற்போது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட விதங்கள் குறித்தும், இந்திய அணி வீரர்கள் சிலர் குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடியதாக அவரை புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : புஜாரா களத்தில் இருக்கும் போது ஆட்டம் மந்தமாக இருந்தது. அதே நேரத்தில் ரிஷப் பண்ட் களத்தில் இறங்கும்போது ஆட்டமே அப்படியே மாறியது.
ஒருகட்டத்தில் எங்களுக்கு சாதகமாக இருந்த போட்டி இந்திய அணியின் பக்கம் திரும்பியது. ரிஷப் பண்ட்க்கு எப்போது அட்டாகிங் பிளே விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும். அவர் எந்த திசையில் ஆடினால் தன்னால் ரன் குவிக்க முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இதனால் நாங்கள் அடுத்த முறை அவருடன் விளையாடும் போது கொஞ்சம் கவனமாக விளையாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டினால் தொடர்ச்சியாக வேகமாக ரன்களை குவிக்க முடியும் என்றும் அவர் இந்திய அணியில் ஒரு அபாயகரமான வீரர் என்றும் அவரை புகழ்ந்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய அணி 350 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்தது. அதனை எதிர்த்து விளையாடிய பண்ட் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்து வெற்றிகரமாக முடித்துக் கொடுத்து வரலாற்று வெற்றியை பதிவு செய்ய உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடிய ரிஷப் பண்ட் 274 ரன்களை குவித்தது மட்டுமின்றி இரண்டு அரைசதங்களை அடித்தது குறிப்பிடத்தக்கது.