இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் 3 ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி துவங்கும் அத்தொடரில் சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி களமிறங்க உள்ளது. அத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அத்தொடருக்கு முன்பாக இந்தியா – ஆஸ்திரேலியாவை சேர்ந்த தரமான வீரர்களைக் கொண்ட ஆல் டைம் கனவு அணியை பட் கமின்ஸ் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நவீன கிரிக்கெட்டின் இந்திய ஜாம்பவான்கள் இடம் பெறவில்லை. அந்த அணியின் முதல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆகிய 2 உலகக் கோப்பைகளை (2015, 2023) வென்ற டேவிட் வார்னர் இடம் பிடிப்பதாக கூறியுள்ளார்.
பட் கமின்ஸ் ஆல் டைம்:
அவருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது மட்டுமல்லாமல் 2011 உலகக்கோப்பை வென்ற சச்சின் டெண்டுல்கரை மற்றொரு ஓப்பனிங் வீரராக அவர் தேர்ந்தெடுத்துள்ளார். 3வது இடத்தில் அடுத்தடுத்த உலகக் கோப்பைகளை (2003, 2007) வென்ற ஆஸ்திரேலியா கேப்டனாக சாதனைப் படைத்துள்ளார் ரிக்கி பாண்டிங் தேர்வாகியுள்ளார். அடுத்ததாக 4வது இடத்தில் 2 உலகக் கோப்பைகளை (2015, 2023) வென்றுள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தேர்வாகியுள்ளார்.
5வது இடத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த உலகக்கோப்பை வெற்றியாளர் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டர் ஷேன் வாட்சன் இடம் பிடித்துள்ளார். 6வது இடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்த ஃபினிஷராக அறியப்படும் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் பெவன் இடம் பெறுவதாக கமின்ஸ் கூறியுள்ளார். 7வது இடத்தில் இந்தியாவை சேர்ந்த மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் 2011 உலகக்கோப்பை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி இடம் பிடித்துள்ளார்.
இந்தியா – ஆஸ்திரேலியா கலந்த கனவு அணி:
8வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, 9வது இடத்தில் வரலாற்றின் மகத்தான ஸ்பின்னர் ஷேன் வார்னே ஆகியோர் தேர்ந்தெடுத்துள்ளனர். 10, 11வது இடங்களில் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர்களான ஜஹீர் கான், கிளன் மெக்ராத் ஆகியோரை தேர்ந்தெடுத்துள்ளனர். மொத்தத்தில் உலகக் கோப்பையை வென்ற வீரர்களை பட் கமின்ஸ் தம்முடைய கனவு அணியில் முன்னுரிமை கொடுத்து தேர்ந்தெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அஸ்வின் வருவதால் ஆஸி பேட்ஸ்மேன்கள் அதை திருட முயற்சிக்காதிங்க.. ரவி சாஸ்திரி கலகலப்பா எச்சரிக்கை
கமின்ஸ் கனவு ஆஸ்திரேலியா – இந்தியா ஆல் டைம் கனவு ஒருநாள் அணி (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியின் வாயிலாக): டேவிட் வார்னர், சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித், ஷேன் வாட்சன், மைக்கேல் பெவன், எம்எஸ் தோனி (கீப்பர்), பிரட் லீ, ஷேன் வார்னே, ஜஹீர் கான், கிளன் மெக்ராத்.



