
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் மூன்றாம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 20 ஓவரில் 201 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 60, ரகுவன்ஷி 50, கேப்டன் ரஹானே 38 ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய ஹைதராபாத் ஆரம்ப முதலே அதிரடியாக விளையாட முயற்சித்து சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 16.4 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கிளாசின் 33 ரன்கள் எடுத்த நிலையில் கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 3, வைபவ் அரோரா 3, ரசல் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். கொல்கத்தா தங்களுடைய இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது.
மறுபுறம் முதல் போட்டியிலேயே 286 ரன்கள் அடித்த ஹைதராபாத் தொடர்ந்து அசத்தும் என்று நம்பப்பட்டது. ஆனால் அதற்காக போட்டிகளில் அனைத்து நேரங்களிலும் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முயற்சிக்கும் அந்த அணி சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் விளையாட மறுக்கிறது. அதனால் கடைசி 3 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்துள்ள ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தில் விழுந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் சுமாராக பேட்டிங் செய்தது தோல்விக்கு காரணமில்லை என்று ஹைதராபாத் கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். மாறாக ஃபீல்டிங் துறையில் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணம் என்று தெரிவிக்கும் அவர் அடுத்தப் போட்டியில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“எங்களுக்கு சிறந்த நேரம் இல்லை. இந்த பிட்ச்சில் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டது எட்டக்கூடிய இலக்காகும். இருப்பினும் களத்தில் நாங்கள் நிறைய விட்டோம். கடந்த 3 போட்டிகளில் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் நாங்கள் நிதர்சனத்துடன் இருக்க வேண்டும். வெற்றிக்காக எந்த ஆப்ஷன்களை சிறப்பாக தேர்ந்தெடுக்க முடியும் என்பதை நாங்கள் மீண்டும் சென்று பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: கடைசி 2 போட்டியில் செய்ஞ்ச தப்பை இந்த போட்டியில் பண்ணல.. வெற்றிக்கு பிறகு – அஜின்க்யா ரஹானே மகிழ்ச்சி
“அதிரடியாகப் போட்டியை எடுக்கும் போது எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சிறந்தவர்கள். ஆனால் அதை திரும்பிப் பார்க்கும் போது ஏதேனும் வித்தியாசமான ஆப்ஷனை எடுத்திருக்க வேண்டும். இப்போட்டியில் சுமாரான ஃபீல்டிங் மற்றும் பௌலிங் மோசமாக இருந்ததே தோல்விக்கு காரணம். நாங்கள் சில கேட்ச்களை ஆரம்பத்திலேயே பிடித்து அவர்களை நிறுத்தியிருக்க வேண்டும். மொத்தத்தில் வெற்றியைப் பெற என்ன வித்தியாசமான ஆப்சன்களைப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி நான் பார்க்க வேண்டும். மற்றபடி இதில் அதிகமாகப் பார்க்க வேண்டியதில்லை. அடுத்தப் போட்டியில் எங்களுக்கு நன்றாக தெரிந்த மைதானத்தில் நாங்கள் விளையாட உள்ளோம்” என்று கூறினார்.