ஆரம்பத்திலேயே வரலாற்று சாதனை, புதிய ஒருநாள் கேப்டனை அறிவித்த ஆஸ்திரேலியா – யார்னு பாருங்க

australia
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 டி20 உலக கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்க போராட உள்ளது. 90களில் மிகப்பெரிய எழுச்சி கண்ட ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் போன்ற ஜாம்பவான் கேப்டன்களின் வருகையாலும் ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்னே என களமிறங்கிய 11 பேரும் சாம்பியன் வீரர்களாக கொண்டிருந்த காரணத்தாலும் சொல்லி அடித்த கில்லியாக செயல்பட்டு 30 வருடங்களுக்குள் உலகிலேயே அதிகபட்சமாக 5 ஒருநாள் கோப்பைகளை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது. அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வெற்றி நடை போடும் ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது உலகின் அனைத்து அணிகளுக்கும் எப்போதுமே சவாலான காரியமாகும்.

அப்படி வலுவான அணியாக இருந்தும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் திண்டாடிய அந்த அணி கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆரோன் பின்ச் தலைமையில் டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ் போன்ற தரமான வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் முதல் கோப்பையை வென்று நிம்மதியடைந்தது. தற்போது அதை தக்கவைக்க களமிறங்கும் அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கடந்த சில வருடங்களாகவே சுமாரான பார்மில் தவிப்பதால் சந்தித்த கடுமையான விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க கடந்த மாதம் ஒருநாள் கேப்டன் பதவியை 35 வயதிலேயே ராஜினாமா செய்தார்.

- Advertisement -

புதிய கேப்டன்:
குறிப்பாக டி20 உலகக் கோப்பையை விட அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கு புதிய கேப்டன் தலைமையில் புதிய அணியை கட்டமைக்கும் வகையில் அவர் அந்த முடிவை எடுத்திருந்தார். அதனால் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் பந்தை சேதப்படுத்திய வழக்கில் 2018இல் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் விதிக்கப்பட்ட கேப்டன்ஷிப் தடையை நீக்குவதற்கான வேலைகளை ஆஸ்திரேலிய வாரியம் கடந்த சில தினங்களாக செய்து வருகிறது.

அதனால் அடுத்த கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் கடைசி நேரத்தில் யாருமே எதிர்பாராத வகையில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுவாகவே கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் காயங்களை அதிகமாக சந்திப்பார்கள் என்பதால் நிலையான ஒருவரை பெறுவதற்காக பெரும்பாலும் பேட்ஸ்மேன்களே கேப்டன்களாக நியமிக்கப்படுவர். அதற்கு விதிவிலக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் ஃபெய்னுக்கு பதில் ஏற்கனவே கேப்டனாக அறிவிக்கப்பட்ட பட் கமின்ஸ் அதில் சிறப்பாக செயல்படுவதால் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

மேலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இதுவரை எந்த வேகப்பந்து வீச்சாளரும் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக செயல்பட்டதில்லை என்ற நிலைமையில் இந்த அறிவிப்பால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலியாவின் கேப்டனாக செயல்படும் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை கமின்ஸ் படைத்துள்ளார். இது பற்றி ஆஸ்திரேலியாவின் தலைமை தேர்வுக்குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி பேசியது பின்வருமாறு.

“டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் பட் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறார். அந்த வகையில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஒருநாள் உலகக் கோப்பையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்வதற்கு அவரை போன்ற தரமான வீரர்கள் நிறைய பேர் இருப்பதற்கு நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். எங்களுடைய வாரியமும் தேர்வு குழுவினரும் 2023 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை தலைமை தாங்க அவர் தகுதியானவர் என்பதை ஒரு மனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

இது பற்றி கமின்ஸ் பெருமையுடன் பேசியது பின்வருமாறு. “பின்ச் தலைமையில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன். அவரிடம் நான் கேப்டன்ஷிப் பற்றி நிறைய கற்றுள்ளேன். எங்களது அணியில் தற்போது நிறைய அம்சங்களில் முன்னேற்றத்தை காண வேண்டியுள்ளது. இருப்பினும் எங்களது ஒருநாள் அணியில் நிறைய அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பது எனக்கு அதிர்ஷ்டமாகும்” என்று கூறினார். முன்னதாக 2018இல் பந்தை சேதப்படுத்திய வழக்கில் தண்டனைக்கு உள்ளான டேவிட் வார்னர் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டால் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு மற்றும் அதிருப்தி ஏற்படும் என்பதாலேயே கடைசி நேரத்தில் இந்த முடிவை ஆஸ்திரேலியா எடுத்துள்ளதாக தெரிகிறது.

Advertisement