இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நாளை டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் நடைபெற இருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்த நாளான்று நடைபெறும் இந்த பாக்சிங் டே போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் இந்த போட்டிக்கான பிளேயிங் லெவனை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவித்து விட்டது.
அறிமுக வீரருக்கு அறிவுரை வழங்கிய பேட் கம்மின்ஸ் :
அந்த வகையில் இந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி முதல் மூன்று போட்டிகளில் விளையாடிய நாதன் மெக்ஸ்வீனி 6 இன்னிங்ஸ்கலில் 72 ரன்கள் மட்டுமே குவித்ததால் அவர் கடைசி இரண்டு போட்டிகளுக்கான அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் என்கிற வீரருக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற பயிற்சி போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்த அவருக்கு ஆஸ்திரேலிய நிர்வாகம் தற்போது வாய்ப்பை வழங்கியுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் 19 வயதிலேயே இந்தியா போன்ற பலமான அணிக்கு எதிராக களமிறங்க இருக்கும் அவர் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமாக இருக்கும் அவருக்கு அறிவுரை வழங்கும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சாம் கோன்ஸ்டாஸ் எப்பொழுதும் நன்றாக விளையாட வேண்டும் என்று விரும்பக் கூடியவர். 18 வயது இளைஞனாக நான் இருக்கும்போது எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைத்தது.
அந்த சமயத்தில் ஒரு போட்டி எனக்கு சரியாக செல்லவில்லை. ஆனால் அது என்னுடைய தவறு கிடையாது. என்னை தேர்வு செய்தவர்களின் தவறு. தற்போது நீங்களும் இளம் வயதிலேயே உங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையை துவங்க இருக்கிறீர்கள். எனவே போட்டியை பற்றி அதிகமாக கவலைப்படாமல் இது உங்களுக்கு ஒரு சிறப்பான தருணம் என்று நினைத்து விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : அந்த கெளரவ சாதனை கிடைச்சும்.. 5 நிமிடத்தில் தோனி வேணாம்ன்னு விட்டுட்டு போனாரு.. ரவி சாஸ்திரி
எனவே இந்த இந்திய அணிக்கு எதிரான தொடரை அனுபவித்து விளையாட வேண்டும். உங்களுடைய ஆரம்ப கட்டத்தில் இது போன்ற ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும் போது எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள் அதுமட்டும் போதும். பதட்டம் அடையாமல் போட்டியை ரசித்து விளையாடுங்கள் என்று அவருக்கு கம்மின்ஸ் அறிவுரை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.



