ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி கான்பெர்ரா நகரில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி அமர்க்களமாக அந்த இன்னிங்ஸை விளையாடியிருந்தது. குறிப்பாக போட்டியின் 9.4 ஓவர்கள் வரை விளையாடியிருந்த இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 97 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஆனாலும் அந்த போட்டியின் இடையே மழை பெய்ததன் காரணமாக அந்த ஆட்டம் முழுவதுமாக நடைபெறாமல் போனது.
சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் இப்படி விளையாடுறது நல்லது : பார்த்திவ் பட்டேல்
இருந்தாலும் இந்திய அணியின் அந்த அதிரடியான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. குறிப்பாக அந்த போட்டியில் துவக்க வீரராக விளையாடிய சுப்மன் கில் 20 பந்துகளை மட்டுமே சந்தித்து 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 37 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.
அதோடு கேப்டன் சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 39 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தனர். அவர்கள் இருவரது அபாரமான ஆட்டம் அந்த இன்னிங்ஸ் முழுவதும் தொடர்ந்து இருந்தால் நிச்சயம் இந்திய அணி பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்றிருக்கும்.
இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரரான பார்த்திவ் பட்டேல் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சூரியகுமார் யாதவ் 39 ரன்கள் அடித்து இந்த முதல் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
கடந்த ஓராண்டாகவே அவர் 11 ரன்கள் சராசரியில் மட்டுமே விளையாடி வந்த வேளையில் மீண்டும் அவரது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பியுள்ளார். அவர் மட்டும் அதிரடியாக விளையாட துவங்கி விட்டால் எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவார். அதேபோன்று துணை கேப்டனான சுப்மன் கில்லும் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடினார்.
இதையும் படிங்க : உங்கள நெனச்சா பெருமையா இருக்கு.. இது சாதாரண வெற்றி கிடையாது.. சபாஷ் சபாஷ் – விராட் கோலி வாழ்த்து
ஏற்கனவே நிலையான ரன் குவிக்கும் திறனுடைய அவர் கூடுதலாக அதிரடியாகவும் விளையாடும் டெக்னிக்கை வளர்த்துக் கொண்டால் எந்த ஒரு பார்மெட்டிலும் அவரால் மிகச் சிறப்பாக செயல்பட முடியும். சூரியகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் ஆகியோரது அதிரடி இந்திய டி20 அணிக்கு மிகப்பெரிய பாசிட்டிவான விடயம் என பார்த்திவ் பட்டேல் அவர்கள் இருவரையும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



