இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய அணியில் இடம் பிடித்தாலும் தற்போது முன்னணி வீரராக திகழ்ந்து வருகிறார். அவிவப்போது தோனியுடன் ஒப்பிடப்படும் அவர் பார்ம் அவுட் ஆகி அணியில் இருந்து வெளியேறும் அபாயத்தில் கூட இருந்துள்ளார். ஆனாலும் மீண்டும் தனது போராட்டத்தை வெளிப்படுத்தி வெளிக்கொணர்ந்த ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடருக்கு பின்னர் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் சரி, அணித் தேர்வாளர்கள் மத்தியிலும் சரி நீங்க நம்பிக்கையை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் அவர் ஆடிய அந்த தொடரை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக கேப்டனாக பொறுப்பேற்று டெல்லி அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
மேலும் தற்போது நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் அவரது தலைமையிலான டெல்லி அணி தான் முதலிடத்தில் உள்ளது. அந்த அளவிற்கு தனது ஆட்டத்தை கடந்த ஓராண்டாகவே வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் வருங்கால நட்சத்திரமாக ரிஷப் பண்ட் விளங்குவார் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆன பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : 2018 – 19 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் போது அவரிடம் நிறைய பேசினேன். இந்த சின்ன வயதில் இவ்வளவு விஷயங்களை அவர் செய்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. மேலும் நாளுக்கு நாள் அவருடைய உழைப்பினால் அவர் முன்னேறி வருகிறார். எதிர்கால இந்திய அணியில் நிச்சயம் அவர் பெரிய இடத்திற்கு செல்வார்.
எந்த வகையான கிரிக்கெட்டிலும் தனது அதிரடி காட்ட பண்ட் தவறுவதில்லை. அவரது இந்த குணம் நிச்சயம் அவரை இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாற்றும் என பார்த்திவ் பட்டேல் கூறியது குறிப்பிடத்தக்கது.