
பெங்களூருவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து இந்தியா ஒரு போட்டியில் தோற்று பின்னடைவை சந்தித்துள்ளது. முன்னதாக அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்தது 46க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது.
அதே போல கடைசி நாளில் 107 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இடது கை பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்தனர். மறுபுறம் ரவிச்சந்திரன் அஸ்வின் உலகிலேயே இடது கை வீரர்களை அதிக முறை அவுட்டாக்கி உலக சாதனை படைத்துள்ளார். அதனால் அவரை கேப்டன் ரோகித் சர்மா விரைவாக பவுலிங் செய்ய வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதை செய்யாத அவர் சிராஜ், பும்ராவை பயன்படுத்தினார். அதில் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்திய நிலையில் சிராஜ் தடுமாறினார். அப்போதும் அஸ்வினை கொண்டு வராத ரோகித் வெற்றி கைமீறிய பின் நியூசிலாந்துக்கு வெறும் 10 ரன்கள் மட்டும் தேவைப்பட்ட போது 2 ஓவர்களை கொடுத்தார்.
இந்நிலையில் உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னராக இருக்கும் அஸ்வினை அப்படி சரியாகப் பயன்படுத்துவது பற்றி ரோகித் சர்மா விளக்கம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் பார்த்திவ் படேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஏனெனில் அஸ்வினை சரியாக பயன்படுத்தியிருந்தால் வெற்றிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது”
“ஏனெனில் உங்களுடைய முதன்மை பவுலரான அஸ்வினை நீங்கள் முடிந்தளவுக்கு அதிகமாக பந்து வீச வைக்க வேண்டும். சொல்லப்போனால் அஸ்வின் புதிய பந்தில் வீசுவாரா இல்லையா என்று நான் விவாதித்தோம். ஏனெனில் அவர் புதிய பந்திலும் 4வது இன்னிங்ஸில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அதை செய்யாத ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் கண்டிப்பாக ஆச்சரியமாக அமைந்தது”
இதையும் படிங்க: மகளிர் டி20 உ.கோ: 32 ரன்ஸ்.. ஒரே வருடத்தில் 2வது சோக் செய்த தெ.ஆ.. நியூஸிலாந்து சரித்திர வெற்றி
“கடைசியில் 2 ஓவர்கள் வீசிய அஸ்வின் அந்த 12 பந்துகளிலும் எதிரணி பேட்ஸ்மேன்களை 2 – 3 முறை திணறடித்தார். அதனால் செய்தியாளர்களை சந்திக்கும் போது அஸ்வினை ஏன் பயன்படுத்தவில்லை? என்று ரோஹித் சர்மாவிடம் கேட்க வேண்டும் என நினைக்கிறேன்” எனக் கூறினார். அதே சமயம் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்த முடிவு தவறில்லை என்று தாம் கருவதுவதாக பார்த்திவ் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.