இளம் வயதிலேயே இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்களில் பார்த்தீவ் பட்டேலும் ஒருவர். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாட அதன் காரணமாக 2002 ஆம் ஆண்டு தனது 17ம் வயதிலேயே இந்திய அணியில் அறிமுகமானவர். இவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் இடதுகை பேட்ஸ்மேனாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். முதன்முதலாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் மூலம் அறிமுகமானார். இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பார்த்தீவ் பட்டேல் 934 ரன்கள் அடித்துள்ளார். அதன்பின் 32 ஒருநாள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இவர் கடைசியாக இந்திய அணிக்காக 2018ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாடியுள்ளார். அதிலும் அணியில் இடம் கிடைத்ததே தவிர பிளேயிங் லெவனில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ட்வீட் செய்துள்ளார்.
இவர் 194 உள்ளூர் போட்டிகளில் பங்கு பெற்று 67 அரைசதம் 27 சதங்கள் விளாசியுள்ளார். இதன் மூலம் மிகவும் எளிதாக 11ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் ரஞ்சிக் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடர்களிலும் விளையாடியுள்ளார். பார்த்தீவ் பட்டேல் ரஞ்சிக் கோப்பையில் குஜராத் அணியின் கேப்டனாக இருந்து கோப்பையை வென்றது கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
— parthiv patel (@parthiv9) December 9, 2020
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு திடுக்கிடும் செய்தியாக தனது ஓய்வை டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதில் “எனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கை இன்றுடன் முடிகிறது. நான் 17 வயதாக இருக்கும்போது இந்திய கிரிக்கெட் வாரியம் என்மீது நம்பிக்கை வைத்து இந்திய அணியில் சேர்த்துக்கொண்டது.முதலில் இதற்காக அவர்களுக்கு எனது முழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். அதன்பின் எனது கிரிக்கெட் பயணத்திற்கு தூணாக இருந்த எனது குடும்பத்திற்கும் குஜராத் கிரிக்கெட் வாரியத்திற்கும் நான் கடமை பட்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் பார்த்தீவ் பட்டேல்.
13ஆவது ஐ.பி.எல் சீசனில் ஆர்சிபி அணியில் இடம்பெற்ற இவர், ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. காரணம், அவருக்கு பதிலாக மாற்று வீரராக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவ்தத் படிக்கல் தொடர்ந்து சிறப்பாக விளையாடியது அவரது இடத்தினை ஐ.பி.எல் தொடரில் பறித்தது என்றே கூறலாம். ஒருவேளை தேவ்தத் படிக்கல் சொதப்பலாக விளையாடியிருந்தால் பார்திவ் படேலுக்கு களமிறங்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அதன்மூலம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்திருக்கலாம்.
ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த விரக்தியின் காரணமாகக் கூட பார்திவ் படேல் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜன், ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இடம்பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.