இந்த 2020 ஆம் ஆண்டு ஏற்ற இறக்கம் ஆகவே காணப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கங்கள் கிரிக்கெட் உலகையும் விட்டுவைக்கவில்லை. ஏனெனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்திய அணியின் முன்னணி வீரர்களான தோனி மற்றும் ரெய்னா ஆகியோர் ஒரே நாளில் ஓய்வினை அறிவித்தார்கள். அதன்பிறகு தற்போது அடுத்த ஓய்வு அறிவிப்பாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்திவ் பட்டேல் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான இவர் தனது முதல் போட்டியை 17 வயதில் இந்திய அணிக்காக துவங்கினார். 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான இவர் கடைசியாக 2012ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.
அதன் பிறகு இவருக்கு இந்திய அணியில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகமான இவர் மிக இளம் வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார். அதுமட்டுமின்றி தான் அறிமுகமான அடுத்த ஆண்டே அதாவது 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை அணியிலும் தேர்வானார். ஆனால் அதன்பின்னர் இவருக்கு ஏமாற்றம் ஆரம்பித்தது.
அதாவது அவர் அணியில் இடம்பிடித்த சில ஆண்டில் டிராவிட் விக்கெட் கீப்பராக மாற்றம் அடைந்து விளையாடியதால் இவருக்கு வாய்ப்பில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து தோனியின் வருகையையும் இவரது சர்வதேச கேரியரை இக்கட்டில் தள்ளியது. அவ்வப்போது இடையிடையே வாய்ப்புகளை பெற்று வந்த அவர் 2011ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார். அதன் பிறகு பெரிய அளவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அடுத்தடுத்த வீரர்களின் வருகையாலும் நீண்டநாள் விளையாடாமல் இருந்ததாலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.
இதுவரை இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 934 ரன்களை குவித்துள்ளார். அதோடு 62 கேட்சிகளையும் இவர் பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 38 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 736 ரன்களையும், 30 கேட்சிகளையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமின்றி இவர் இந்திய அணிக்காக 2 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இவரது சரியாக வெளிப்படவில்லை என்றாலும் first-class கிரிக்கெட்டில் இவர் நிகழ்த்திய அற்புதம் அதிகம்.
187 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 10 ஆயிரத்து 797 ரன்களை குவித்து உள்ளார். அதுமட்டுமின்றி குஜராத் அணியை கேப்டனாக வழிநடத்திய அவர் 2016-17 ஆம் ஆண்டில் ரஞ்சி தொடரை வென்று கொடுத்தார். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்த இவர் பல்வேறு அணிக்காக விளையாடியுள்ளார் தற்போதும் ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
— parthiv patel (@parthiv9) December 9, 2020
இந்நிலையில் இன்று தனது ஓய்வு அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தோனி, ரெய்னா என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஓய்வு அறிவித்த நிலையில் தற்போது பார்திவ் பட்டேலும் ஓய்வை அறிவித்து உள்ளது இந்திய ரசிகர்களிடையே சற்று வருத்தத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.