ஒற்றை ஆளாக 404* ரன்ஸ்.. பிரையன் லாரா போல மிரட்டிய இளம் வீரர்.. யுவியின் 24 வருட சாதனை தகர்ப்பு

Prakhar Chaturvedi
- Advertisement -

இந்தியாவில் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் டெஸ்ட் தொடரான கூச் பெஹர் கோப்பையின் 2024 சீசனின் இறுதிப்போட்டி ஜனவரி 12ஆம் தேதி துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய மும்பை மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. கர்நாடகாவில் உள்ள கேஎஸ்சிஏ மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை முடிந்தளவுக்கு போராடி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 380 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஆயுஷ் மஹாட்டரே சதமடித்து 145, ஆயுஷ் சச்சின் 73 ரன்கள் எடுத்தனர். கர்நாடக சார்பில் அதிகபட்சமாக ஹர்திக் ராஜ் 4, முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் 2 மற்றும் சமர்த் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

- Advertisement -

அபார சாதனை:
அதை தொடர்ந்து களமிறங்கிய கர்நாடக அணிக்கு துவக்க வீரர் பிரகார் சதுர்வேதி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த கார்த்திக் 50 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய சதுர்வேதி சதமடித்த நிலையில் எதிர்ப்புறம் வந்த ஹர்ஷில் தர்மணி தம்முடைய பங்கிற்கு 2வது விக்கெட் 299 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 169 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக வந்த கார்த்திகேயா 72 ரன்களும் சமித் டிராவிட் 22 ரன்களில் அவுட்டாகி சென்றார்கள். ஆனாலும் ஒருபுறம் நங்கூரமாக நின்று மும்பைக்கு சிம்ம சொப்பனமாக மாறிய சதுர்வேதி சதமடித்தும் ஓயாமல் பிரமாதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவருக்கு எதிர்ப்புறம் கைகொடுக்க முயற்சித்த குரு பிரபாகர் 3 கேப்டன், தீரஜ் கௌடா 7, ஹர்திக் ராஜ் 51, யுவராஜ் அரோரா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இருப்பினும் இந்த பக்கம் முச்சதம் அடித்தும் அவுட்டாகாமல் தொடர்ந்து அடம் பிடித்த சதுர்வேதி மும்பை பவுலர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு 46 பவுண்டரி 3 சிக்சருடன் ஜாம்பவான் பிரையன் லாரா போல 404* (638) ரன்கள் குவித்துள்ளார். இதன் வாயிலாக கூச் பெஹர் கோப்பை வரலாற்றின் இறுதிப்போட்டியில் 400 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: நிறைய சப்போர்ட் பண்ணாரு.. என்னோட கேரியருக்கான பாராட்டு அவரையும் சேரும்.. ஷிகர் தவான் பேட்டி

அதைவிட கூச் பெஹர் இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற ஜாம்பவான் யுவராஜ் சிங் 24 வருட சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1999 ஃபைனலில் தோனி இடம் வகித்த பீகாருக்கு எதிராக பஞ்சாப் அணிக்காக யுவராஜ் சிங் 358 ரன்கள் அடித்தது வெற்றி பெற வைத்ததே முந்தைய சாதனையாகும். அவரது அசத்தலான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் கர்நாடகா 890/8 ரன்கள் விளாசி டிக்ளேர் செய்வதாக அறிவித்துள்ளது.

Advertisement