இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட் இடத்தில் அவர் புதிய பயிற்சியாளராக செயல்பட உள்ளார். 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளை வென்ற அனுபவம் கொண்ட அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் ஆலோசகராகவும் சாம்பியன் பட்டங்களை வென்ற அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அடுத்ததாக நடைபெறும் இலங்கை தொடரிலிருந்து கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். அவர் இந்திய அணிக்குள் வந்ததும் அதிரடியான சில மாற்றங்கள் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 35 வயதை கடந்த சீனியர் வீரர்களை அவர் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய முடிவு:
சொல்லப்போனால் கம்பீர் கொடுத்த அழுத்தத்தாலேயே ரோஹித், கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதாக சில ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் மற்றொரு சீனியரான முகமது ஷமி காலத்திற்கும் விளையாட முடியாது என்பதால் எந்த கிரிக்கெட்டில் விளையாடலாம் என்பதை பற்றி யோசித்து முடிவு எடுக்குமாறு ராகுல் டிராவிட்டுடன் விடைபெற்ற பவுலிங் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
அது பற்றி அவரிடம் கம்பீர் பேச வேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் மாம்ப்ரே இது பற்றி டெலிகிராப் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “ஷமி என்ன செய்ய விரும்புகிறார் என்பது பற்றி அவரிடம் பயிற்சியாளர் குழுவினர் பேச வேண்டும். இனிமேலும் அவர் இளமையானவர் கிடையாது. எனவே எங்கே பொருந்தி இன்னும் எத்தனை வருடங்கள் விளையாடலாம்? என்பதைப் பற்றி அவர் பார்க்க வேண்டும்”
“அதே போல இந்திய அணி நிர்வாகமும் அவரை எப்படி பயன்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். இந்த சமயத்தில் கௌதம் கம்பீர் அவரின் சிறந்த செயல்பாடுகளை எப்படி கொண்டு வருவது என்பதை கண்டறிவார் என்று நான் நம்புகிறேன். ஒருவேளை ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினால் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருக்கு அவரை வடிவமைக்க வேண்டும்”
இதையும் படிங்க: 2002லயே அவர் சொன்னதை நிரூப்பிச்சுட்டீங்க.. உங்களிடம் மகிழ்ச்சியா விளையாட முடியாது.. ஆண்டர்சனை வாழ்த்திய சச்சின்
“பல்வேறு வீரர்களின் ஃபிட்னஸ் லெவல் ஒரே மாதிரியாக இருக்காது. எனவே வீரர்கள் வித்தியாசமாக நடத்தப்பட வேண்டும். நீங்கள் ஒரு இளம் வீரருடன் ஷமியை ஒப்பிட முடியாது. நீங்கள் அவரின் மதிப்பையும் உணர வேண்டும். குறிப்பாக அவர் யோயோ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? அல்லது அபாரமான பந்துகளை வீசி இந்தியாவை வெற்றி பெற வைக்க வேண்டுமா? என்பதை முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார். முன்னதாக 2023 உலகக்கோப்பையில் காயத்துடன் விளையாடிய ஷமி இன்னும் குணமடையாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.



