
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த சரித்திர வெற்றிக்கு பந்து வீச்சுத் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா 15 விக்கெட்டுகள் எடுத்து கருப்பு குதிரையாக செயல்பட்டார். அதன் காரணமாக தொடர் நாயகன் விருது வென்ற அவருக்கு நிகராக இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்கும் மிகச் சிறப்பாக பந்து வீசினார் என்றே சொல்லலாம்.
குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பும்ரா 16, 18வது ஓவரை துல்லியமாக வீசி 6 ரன்கள் மட்டும் கொடுத்தார். அவருக்கு நிகராக அர்ஷ்தீப் சிங்கும் முக்கியமான 19வது ஓவரில் அற்புதமாக பந்து வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தத்தை அதிகரித்தார்.
டெஸ்ட் வாய்ப்பு:
அதனாலேயே கடைசியில் பாண்டியா ஓவரில் சூரியகுமாரின் அபார கேட்ச்சால் மில்லர் அவுட்டாகி இந்தியாவும் வெற்றி பெற்றது. அந்த வகையில் 17 விக்கெட்டுகள் எடுத்த அர்ஷ்தீப் சிங் ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற உலக சாதனையை சமன் செய்தார். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் அர்ஷ்தீப் அறிமுகமாக பிரகாச வாய்ப்புள்ளதாக பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
அதற்கு முன் அர்ஷ்தீப் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி அனுபவத்தை பெறுவது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது சூழ்நிலையை பொறுத்தது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் நாம் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடினால் அவருக்கு வாய்ப்புள்ளது”
“இந்தியாவில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். அதே சமயம் அர்ஷ்தீப் முதல் தர கிரிக்கெட்டில் இன்னும் அதிகமான அனுபவம் பெற வேண்டும் என்று நான் கருதுகிறேன். அங்கே விளையாடும் போது உங்களால் ஸ்விங்கை கட்டுப்படுத்துவது, ரிவர்ஸ் ஸ்விங்கை எப்படி பயன்படுத்துவது போன்ற அம்சங்களை தெரிந்து கொள்ள முடியும். அப்படி வேலை செய்வதோடு நல்ல ஃபிட்னஸ் கடைபிடிப்பதும் அவசியம்”
இதையும் படிங்க: 2026 டி20 உ.கோ தொடரிலும் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமாரை கேப்டனாக்க விரும்பும் பிசிசிஐ.. காரணம் இதோ
“டி20 கிரிக்கெட்டில் இப்போதே அவர் தன்னுடைய திட்டங்களையும் முதிர்ச்சியையும் காண்பித்துள்ளார். பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை நன்றாக பந்து வீசும் திறமையைக் கொண்டுள்ள அவர் முன்னேறுவதற்கான ஆர்வத்தை பாடி லாங்குவேஜில் காட்டுவது கூடுதல் பலமாகும். எனவே அவர் அழுத்தத்தை சமாளிக்க தயாராக உள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி அனுபவத்தை பெறும் போது அவரால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்த முடியும்” என்று கூறினார்.