இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தனது சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமின்றி பந்துவீச்சில் அசத்திய பாண்டியா ஆல்-ரவுண்டராக அறியப்பட்டு இந்திய அணியில் வாய்ப்பினை பெற்றார்.
தான் அறிமுகமானதிலிருந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பாண்டியர் தற்போது இந்திய அணியில் நிரந்தர இடம் வகித்தாலும் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் ஓவரை பற்றிய மோசமான அனுபத்தை பற்றி தற்போது பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அப்படி சர்வதேச போட்டியில் அறிமுகமான முதல் ஓவரில் பாண்டியா தொடர்ச்சியாக மூன்று வைடு வீச அது மட்டுமின்றி அந்த ஓவரில் 19 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
இதுதவிர அந்த போட்டியில் மூன்று ஓவர்கள் வீசிய பாண்டியா 37 ரன்களை வழங்கினார். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வீசிய முதல் 8 பந்தில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் தனது கிரிக்கெட் முடிந்துவிடும் என்று பயந்த பாண்டியா பின்னர் தோனி சொன்ன பாடம் தன் வாழ்நாள் முழுக்க உதவும் வகையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : உண்மையில் நான் அறிமுகமான அந்த போட்டியோடு என் கிரிக்கெட் பயணம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். உள்ளூர் கிரிக்கெட்டில் கூட நான் அவ்வளவு மோசமாக பந்துவீசி ரன்களை விட்டுக் கொடுத்தது கிடையாது. ஆனால் சர்வதேச போட்டியில் அறிமுகமான முதல் 8 பந்துகளில் 26 ரன்களை வழங்கினேன். இருப்பினும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது எனக்குள் ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
என் மோசமான பௌலிங் குறித்து அப்போதைய கேப்டன் தோனி என்னை எதுவும் கேட்கவில்லை நான் எனது அனுபவம் மூலம் அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் என அவர் விரும்பினார். தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணமாக அது அமைந்தது. தவிர ஆறு மாதங்களுக்கு முன்பு நான் யார் எல்லாம் பார்த்து கிரிக்கெட் விளையாட விரும்பினேனோ அவர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
இப்படி ஒரு அருமையான வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது அதை நாம் வீணடிக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன் என்று ஹார்திக் பாண்டியா கூறினார். மேலும் அப்போது கேப்டனாக இருந்த தோனி தன்னை அறிமுக வீரர் என்பதனாலும் திறமைவாய்ந்த வீரர் என்பதனாலும் நான் எவ்வளவு ரன்கள் கொடுத்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கூறவில்லை. உனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து நீ தொடர்ந்து செயல்படு நிச்சயம் அது உன்னை உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று தோனி என்னிடம் கூறினார்.
அதுமட்டுமின்றி தொடர்ந்து எனக்கு வாய்ப்பு அளிக்கும் போதும் என் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை என்னை சிறப்பாக செயல்பட வைத்தது என்று பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது. ஹர்டிக் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 11 டெஸ்ட் போட்டிகள், 54 ஒருநாள் போட்டிகள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது .