இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த நீண்ட தொடரின் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் தோற்றாலும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இந்த டி20 தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது ஹார்திக் பாண்டியாவின் அதிரடி பேட்டிங் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் மூன்று போட்டிகளிலும் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஹர்டிக் பாண்டியா தொடர்நாயகன் விருதையும் பெற்று அசத்தினார்.
கடந்த ஆண்டு முதுகுப்பகுதியில் அவர் செய்து கொண்ட ஆபரேஷனுக்குப் பிறகு முழுநேர பேட்ஸ்மேனாக ஐபிஎல் தொடரிலும் தற்போது இந்த தொடரிலும் களமிறங்கிய பாண்டியா மெல்ல மெல்ல இந்திய அணியின் பினிஷராக உருவெடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி தனது அதிரடியான பேட்டிங் மூலம் தேவையான ரன்களை குவித்து வரும் பாண்டியா இனி தொடர்ந்து இந்திய அணிக்காக அந்த வேலையை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறாத பாண்டியா மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். தனக்கு குழந்தை பிறந்த பிறகு நீண்ட நாட்களாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த பாண்டியா தற்போது மீண்டும் இந்தியா திரும்பி தனது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். கடந்த ஜனவரி மாதம் நட்டாஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பாண்டியா சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.
From national duty to father duty ❤️ pic.twitter.com/xmdFMljAO1
— hardik pandya (@hardikpandya7) December 12, 2020
நீண்ட மாதங்களுக்கு பிறகு தனது குழந்தையை பார்த்த பாண்டியா அவருடைய குழந்தைக்கு புட்டியில் பால் ஊட்டும் புகைப்படத்தை பகிர்ந்து “தேசியக் கடமை முடிந்து விட்டது இப்போது தந்தைக்கான கடமையை செய்து வருகிறேன்” என டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.