
கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் கடந்த 15 வருடங்களில் ஏராளமான மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டு இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவர் வரை சென்று பரபரப்பான த்ரில்லர் தருணங்களை விருந்தாக படைப்பதால் டெஸ்ட், ஒருநாள் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளையும் பின்னுக்கு தள்ளியுள்ள ஐபிஎல் ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைகளை விட தரத்தில் முதன்மையான தொடராக மாறியுள்ளது. அதைவிட ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை கொடுப்பதால் ஐசிசியை விட பிசிசிஐ உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்துள்ளது.
அதனால் வரும் 2025 முதல் 94 போட்டிகள் கொண்ட தொடராக ஐபிஎல் மேலும் விரிவடைய உள்ளது. ஐபிஎல் தொடரை போலவே 15 வருடங்களுக்கு முன் அதில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் இன்று மேலும் பெரிய பணக்காரர்களாக மாறியுள்ளனர். அதனால் தங்களது அணியின் கிளையை உருவாக்க தொடங்கியுள்ள அவர்கள் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 தொடர்களிலும் புதிய அணியை வாங்கியுள்ளார்கள். அதில் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஏற்கனவே கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், ஆகிய நிர்வாகங்கள் தங்களது கிளை அணியை வாங்கியுள்ளன.
தென்ஆப்பிரிக்க டி20:
இதுபோக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உருவாக்கியுள்ள டி20 சேலஞ்ச் எனும் புதிய தொடரில் விளையாடும் 6 அணிகளையும் மும்பை, சென்னை, ஹைதெராபாத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா ஆகிய நிர்வாக உரிமையாளர்கள் மொத்தமாக வாங்கியுள்ளார்கள். அதுபோக துபாயில் இந்த வருடம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி20 தொடரில் கொல்கத்தா, மும்பை ஆகிய நிர்வாகங்கள் தங்களது புதிய அணிகளை வாங்கியுள்ளன.
இந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாய் கிரிக்கெட் வாரியங்கள் நடத்தும் 2 புதிய டி20 தொடர்களும் வரும் 2023 ஜனவரியில் நடைபெற உள்ளன. மொத்தத்தில் ஐபிஎல் என்பது இந்தியாவையும் கடந்து வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமீரகம் என்ற 3 நாடுகளில் வலுவாக கால்பதித்துள்ளது. இதனால் இதுநாள் வரை வெளிநாட்டு டி20 தொடர்களில் இந்திய வீரர்களை விளையாட பிசிசிஐ அனுமதிக்காமல் இருந்தாலும் இனிமேல் அந்தந்த அணி நிர்வாகங்கள் இந்திய வீரர்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
பாக் வீரர்கள்:
மேலும் ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் தொடரில் விளையாடிய பாகிஸ்தான் வீரர்களை அதன்பின் எல்லை பிரச்சினை காரணமாக பிசிசிஐ தடை செய்திருந்தாலும் இந்த வெளிநாட்டு டி20 தொடர்களில் அவர்களை விளையாட தடை செய்ய முடியாது. சொல்லப்போனால் ஏற்கனவே கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணி நிர்வாகத்தின் கீழ் விளையாடும் நிலையில் அடுத்ததாக துபாய் மற்றும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்களிலும் விளையாட உள்ளனர். இதனால் இந்திய முதலாளிகளுக்காக பாகிஸ்தான் வீரர்கள் விரைவில் மீண்டும் விளையாட உள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் தடை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் உலகின் இதர டி20 தொடரில் விளையாடுகின்றனர். எனவே வெளிநாட்டு டி20 தொடர்களில் அணிகளை வாங்கியுள்ள இந்திய ஐபிஎல் அணி நிர்வாகங்கள் நிச்சயமாக பாகிஸ்தான் வீரர்களையும் தங்களது அணிக்காக விளையாடுவதற்கு வாங்கும் என்பது விரைவில் நடைபெறப்போகிறது. எனவே விரைவில் இந்திய முதலாளிகளை கொண்ட அணி நிர்வாகங்களுக்கு பாகிஸ்தான் வீரர்கள் வேலை செய்யும் வகையில் விளையாடப் போகிறார்கள்” என்று கூறினார்.
உலகில் எஞ்சிய நாடுகளில் நடைபெறும் டி20 தொடரில் வீரர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளங்களை விட தற்போது துபாயில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி20 தொடரில் ஐபிஎல் தொடருக்கு நிகரான சம்பளம் கொடுக்கப்பட உள்ளது. இதனால் வருங்காலங்களில் ஐபிஎல் தொடருக்கு துபாய் டி20 தொடர் சவால் அளிக்கும் வகையில் வளர்ச்சியடையும் என கணித்துள்ள ஆகாஷ் சோப்ரா இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.
“உலகிலேயே முதல் முறையாக ஐபிஎல் தொடருக்கு துபாய் டி20 தொடர் சவால் கொடுக்கப் போகிறது. வீரர்களின் சம்பள வரம்பு என்ன? கிரிக்கெட் வீரர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்க முடியும்? என்பது முக்கியமாகும். 2008இல் முதல் ஐபிஎல் ஏலம் நடந்தபோது கிரிக்கெட் வீரர்கள் ஏலம் போவார்களா என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் இன்று பங்கேற்கும் அனைத்து வீரர்களும் ஏலம் போக வேண்டும் என்று விரும்புகிறார்கள்”
“கிரிக்கெட்டின் உண்மையான கார்ப்பரேட் மயமாக்கல் இப்போது நடக்கிறது. வருடத்தில் 365 நாட்கள் தான் உள்ளன. ஆனால் இப்போதே 700 நாட்களுக்கு நிகரான கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகிறது. தென் ஆப்பிரிக்கா மற்றும் துபாய் வாரியங்கள் வீரர்களை வாங்குவதில் மோதிக்கொள்ள உள்ளன. இதனால் சர்வதேச கிரிக்கெட் பெரிய வெற்றியை பெறப்போகிறது” என்று கூறினார்.