ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி நடைபெற்று வரும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா குரூப் ஏ பிரிவில் எதிர்கொண்ட பரம எதிரியான பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் போட்டிகளில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. மறுபுறம் இந்தியாவிடம் தனது முதல் போட்டியில் போராடி தோல்வியடைந்த பாகிஸ்தான் அந்த வெறியை அடுத்த போட்டியில் கத்துக்குட்டியான ஹாங்காங்கிடம் காட்டி 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
அதனால் குரூப் ஏ பிரிவின் முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் மோதுவதால் மீண்டும் அதில் வெல்லப்போவது யார் என்று அதே எதிர்பார்த்து உலக அளவில் ஏற்பட்டது. அந்த நிலைமையில் செப்டம்பர் 4ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் துவங்கிய சூப்பர் 4 சுற்றின் 2வது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. நீண்ட நாட்களுக்கு பின் இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் வர்ணனையாளர் ரவி சாஸ்திரி இப்போட்டியை தொகுத்து வழங்கிய நிலையில் இம்முறை டாஸ் வென்ற பாகிஸ்தான் சற்றும் யோசிக்காமல் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
3 மாற்றங்கள்:
அத்துடன் இப்போட்டியில் மீண்டும் பாகிஸ்தானை தோற்கடிப்பதற்காக 3 மாற்றங்கள் நிகழ்த்தப்படுவதாகவும் ரோகித் சர்மா அறிவித்தார். அந்த அறிவிப்பின் படி முதலாவதாக காயத்தால் வெளியேறிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் சமீப காலங்களில் அசத்தி நல்ல பார்மில் இருக்கும் இளம் ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா சேர்க்கப்பட்டார். அத்துடன் ரன்களை வாரி வாரி வழங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கானுக்கு பதில் முதல் போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி 2வது போட்டியில் ஓய்வெடுத்த நம்பிக்கை நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார்.
ஆனால் 3வதாக நிகழ்த்தப்பட்ட மாற்றம்தான் எதற்கென்று பெரும்பாலான ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடிய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக்க்கு பதிலாக இளம் சுழல்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் சேர்க்கப் படுவதாக ரோகித் சர்மா தெரிவித்தார். ஒருவேளை ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அவர் சேர்க்கப்பட்டாரா என்பது ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.
மேலும் ஏற்கனவே முதல் சுழல் பந்து வீச்சாளராக சஹால் இருக்கும் நிலையில் ஹூடா 2வதாக செயல்பட முடியும் என்ற நிலைமையில் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு குழப்பமாக உள்ளது. அத்துடன் சஹால் – பிஷ்னோய் ஆகிய இருவருமே லெக் ஸ்பின் பவுலர்கள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இது பற்றி டாஸ் வீசி முடித்தபின் ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “நாங்களும் பந்து வீச விரும்பினோம். ஆனால் தற்போது நாங்கள் சுதந்திரமாக விளையாடி இந்த பிட்ச்சில் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டியுள்ளது”
“டி20 கிரிக்கெட்டில் முக்கிய தருணங்கள் முக்கியமானது. எனவே வெளிப்புற அழுத்தத்தை எடுத்துக் கொள்ளாமல் நாங்கள் ஆரம்பத்திலிருந்தே சிறப்பான துவக்கத்தை பெற வேண்டும். அதேபோல் காயங்களை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. ஜடேஜா காயமடைந்ததால் அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அதனால் 11 பேர் அணியை தேர்வு செய்வதற்கு எங்களுக்கு தலைவலி ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா அணிக்குத் திரும்பியுள்ளார். தீபக் ஹூடா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்” என்று கூறினாலும் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.
இந்திய அணி இதோ: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வென்ற சஹால், அர்ஷிதீப் சிங்



