2023 உ.கோ அப்புறம், முதலில் அக்டோபர் 23 போட்டியை நிறுத்துங்க – முன்னாள் பாக் வீரர்கள் எச்சரிக்கை

Babar Azam Rohit Sharma IND vs PAK
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 23ஆம் தேதியன்று பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களை தவிர்த்துள்ள இவ்விரு அணிகளும் ஆசிய மற்றும் உலக கோப்பைகளில் மட்டும் மோதுகின்றன. அதனால் அதற்கான மவுசு பன்மடங்கு எகிறியுள்ள நிலையில் கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 1992 முதல் தொடர்ச்சியாக வென்று வந்த இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது.

Jay-shah

- Advertisement -

அந்த நிலையில் சமீபத்தில் அதே துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் லீக் சுற்றில் வென்றாலும் மீண்டும் சூப்பர் 4 சுற்றில் மண்ணை கவ்விய இந்தியா பைனலுக்கு கூட செல்லாமல் வெளியேறியது. எனவே அந்த தோல்விகளுக்கு இம்முறை மெல்போர்ன் நகரில் வென்று தக்க பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில் 2023 ஆசிய கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என சமீபத்தில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தின் முடிவில் செயலாளர் ஜெய் ஷா அறிவித்தார்.

கொந்தளிக்கும் பாகிஸ்தான்:
ஆனால் தங்களது நாட்டில் தடை பெற்றுக் கிடந்த சர்வதேச கிரிக்கெட்டை கடுமையான போராட்டத்திற்குப் பின் வெற்றிகரமாக நடத்தி வரும் பாகிஸ்தான் வாரியம் 2008க்குப்பின் 2வது முறையாக ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை போராடி வாங்கியுள்ளது. அப்படிப்பட்ட நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் இருக்கும் ஜெய் ஷா தங்களிடம் ஆலோசிக்காமல் இப்படியொரு கருத்தை வெளியிட்டது ஏமாற்றமளிப்பதாக தெரிவித்துள்ள அந்நாட்டு வாரியம் அதே 2023இல் நடைபெறும் உலக கோப்பை உட்பட 2031 வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஐசிசி தொடர்களிலும் பாகிஸ்தான் பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.

Kamran

மேலும் சமீப காலங்களில் இரு நாட்டுக்கிடையே நல்ல நட்பு ஏற்பட்டு அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதவிருக்கும் கடைசி நேரத்தில் இப்படியொரு கருத்தை தெரிவித்துள்ளது ஜெய் ஷா’வின் கிரிக்கெட் அனுபவமின்மை காட்டுவதாக முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் இந்தியாவின் மிரட்டலுக்கு பாகிஸ்தான் அஞ்சக்கூடாது என்று தெரிவிக்கும் மற்றொரு முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் 2023 உலக கோப்பையை பின்பு பார்ப்போம் முதலில் அக்டோபர் 23இல் நடைபெறும் போட்டியில் பங்கேற்காமல் இந்தியாவை புறக்கணித்து பதிலடி கொடுக்க வேண்டுமென பாகிஸ்தான் வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய் ஷா’வின் கருத்து எதிர்பாராத ஒன்றாக கருதுகிறேன். இந்த வருட ஆசிய கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியில் அவர் பங்கேற்றதிலிருந்து அரசியலை விளையாட்டுக்குள் இழுத்து வந்து எதிரணிக்கு எதிராக பயன்படுத்துவதை தவிர்த்திருக்க வேண்டும். மேலும் ஆசிய கோப்பை பாகிஸ்தானில் மட்டுமே நடைபெற வேண்டும். ஒருவேளை அது பாகிஸ்தானில் நடைபெறாமல் போனால் இந்தியாவுக்கு எதிராக எந்த போட்டியிலும் பாகிஸ்தான் விளையாடக்கூடாது. அது ஐசிசி உலக கோப்பை அல்லது ஆசிய கோப்பை அல்லது அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறும் போட்டி என எதுவாக இருந்தாலும் புறக்கணிக்க வேண்டும்” என்று கூறினார்.

Younis

அதே போல் இந்தியாவின் மிரட்டலுக்கு அஞ்சாமல் தங்களது நாட்டிலேயே ஆசிய கோப்பையை நடத்த வேண்டுமென பாகிஸ்தான் வாரியத்தை கேட்டுக் கொள்ளும் மற்றொரு முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் அது நடைபெறவில்லையெனில் நம்முடைய அணி எப்போதும் இந்தியாவுக்கு பயணிக்கக் கூடாது என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஜெய் ஷா அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஆனால் தோட்டாக்களை போல் அவரது கருத்து வந்துள்ள நிலையில் கடந்த காலங்களில் செயல்பட்டது போல் அல்லாமல் இம்முறை உறுதியாக நிற்க வேண்டுமென பாகிஸ்தான் வாரியத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்”.

இதையும் படிங்க : பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த 11 பேர் தான் சரியா இருப்பாங்க – ஹர்பஜன் வெளியிட்ட பிளேயிங் லெவன்

“ஒருவேளை இந்த முடிவில் இந்தியா பின் வாங்கவில்லையெனில் ஆசிய கோப்பையில் அவர்கள் பங்கேற்காததைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. மேலும் அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்கவோ அல்லது ஆசிய கோப்பையை பொது இடத்தில் நடத்தவோ பாகிஸ்தான் அனுமதிக்கக் கூடாது” என்று கூறினார்.

Advertisement