கோபத்தை ஹாங்காங்கிடம் காட்டிய பாக், பிரம்மாண்ட சாதனை வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு தகுதி – என்ன நடந்தது?

PAK vs HK
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2022 தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதியான நேற்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் மோதின. இவ்விரு அணிகளுமே தங்களது முதல் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை சந்தித்ததால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற இப்போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் களமிறங்கின. குறிப்பாக ஹாங்காங்கை விட பலமான அணியாக கருதப்படும் பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று முதல் போட்டியில் தோல்வியை பரிசளித்த பரம எதிரியான இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க இப்போட்டியில் வென்றே தீரவேண்டும் என்ற வாழ்வா சாவா சூழ்நிலையில் களமிறங்கியது.

அந்த நிலைமையில் சார்ஜாவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஹாங்காங் பவுலர்களை பந்தாடிய பாகிஸ்தான் இந்தியா மீது இருந்த அத்தனை கோபத்தையும் பேட்டிங்கில் வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 193/2 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாம் ஆரம்பத்திலேயே 9 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினாலும் அடுத்து களமிறங்கிய பக்கார் ஜமானுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 2வது விக்கெட்டுக்கு 116 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்தினார்.

- Advertisement -

ஹாங்காங் படுதோல்வி:
அதில் பக்கார் ஜமான் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 53 (41) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரைசதம் கடந்த முஹம்மது ரிஸ்வான் 78* (58) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். அவருடன் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடி காட்டிய குஷ்தில் ஷா அதிரடியாக 5 சிக்சர்களை பறக்கவிட்டு 35* (15) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதைத் தொடர்ந்து 194 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹாங்காங் அணியை இந்தியாவை நினைத்துக்கொண்டே பந்து வீசியது போல் செயல்பட்ட பாகிஸ்தான் ஆரம்பம் முதலே அனலாக பந்துவீசி சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் எடுத்துக்கொண்டே இருந்தது.

சூப்பர் 4 சுற்றுக்கு ஸ்டைலாக செல்ல வேண்டும் என்ற வெறியில் வெறித்தனமாக பந்து வீசிய பாகிஸ்தானுக்கு பதில் சொல்ல முடியாத ஹாங்காங் 10.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஸ்கூல் அணியை போல் வெறும் 38 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் 10 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிகபட்சமாக கேப்டன் நிஜாகத் கான் 8 ரன்கள் எடுத்தார். அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் ஹாங்காங் தங்களது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து வரலாற்றில் மோசமான சாதனை படைத்தது. அந்த பட்டியல்:
1. 38, பாகிஸ்தானுக்கு எதிராக, ஷார்ஜா, 2022*
2. 69, நேபாளுக்கு எதிராக, சட்டோகிராம், 2014
3. 87/9, உகாண்டாவுக்கு எதிராக, புலவாயோ, 2022

- Advertisement -

மறுபுறம் அந்தளவுக்கு அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சடாப் கான் 4 விக்கெட்டுகளையும் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். அதனால் 155 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டில் தங்களது மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 155 ரன்கள், ஹாங்காங்க்கு எதிராக, 2022*
2. 143 ரன்கள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2018

பழிதீர்க்க பாகிஸ்தான்:
இந்த வெற்றியால் குரூப் ஏ பிரிவில் 2 போட்டிகளில் ஒரு வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், இந்தியா, இலங்கை ஆகிய அணிகளை தொடர்ந்து 4வது அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் குரூப் ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் செப்டம்பர் 4ஆம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு துபாயில் மோதுகின்றன.

இதையும் படிங்க : தனக்கு தானே காயம் ஏற்படுத்திக்கொண்டு டி20 உ.கோ அணியில் வாய்ப்பை இழந்த ஸ்டார் பிளேயர் – பரிதாப கதை

அந்த போட்டியில் லீக் சுற்றில் தோல்வியை பரிசளித்த இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்ப்பதற்கு ஹாங்காங்கை புரட்டி எடுத்த புத்துணர்ச்சியுடன் பாகிஸ்தான் தயாராகியுள்ளது. அதே போல் 2வது முறையாக பாகிஸ்தானை மண்ணை கவ்வ வைக்க பொன்னான வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளதால் இந்தியாவும் அதற்கு தயாராகியுள்ளது. இது போக சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 6ஆம் தேதியன்று இலங்கையையும் செப்டம்பர் 8ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தானையும் துபாய் மைதானத்தில் இந்தியா எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement